ரூசோ!
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து, ஜெனிவா நகரில், ஜூன் 28, 1712ல் பிறந்தார் ரூசோ. இயற்பெயர் ஜீன் ஜாக்ஸ் ரூசோ. பிறந்த ஒரு வாரத்தில் தாயை இழந்தார்.எழுத படிக்க கற்று தந்தார் தந்தை. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தினார். கிரேக்க காவியங்களையும், ரோம வரலாற்றையும் எடுத்துரைத்தார். ரூசோவின் தந்தை மீது பொய் குற்றம் சுமத்தி, அரசு அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் வேறு நகரத்திற்கு செல்ல முடிவு செய்தார். நெருங்கிய உறவினர் ஒருவரிடம் மகனை ஒப்படைத்தார். அங்கு ரூசோவுக்கு லத்தீன் மொழியைக் கற்பித்தார் ஒரு பாதிரியார்; மாணவர்களிடம் வெளிப்படும் சிறு சிறு குறைகளுக்காக அடித்து துன்புறுத்தினார். இதை, ரூசோவால் பொறுக்க முடியவில்லை. பாதிரியாரை எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்; இதனால் பாதியில் நின்றது கல்வி.பின், நீதிமன்றத்தில் பத்திரங்களை நகல் எடுக்கும் வேலை கிடைத்தது. உயர் அலுவலருடன் ஒத்துப்போக முடியாததால், அந்த வேலையிலும் நீடிக்க இயலவில்லை.பிறருக்காக பரிந்து பேசும் குணம், ரூசோவிடம் இயல்பாகவே இருந்தது.ஐரோப்பிய நாடான இத்தாலி சென்றார் ரூசோ; கட்டுரை மற்றும் கவிதை எழுத ஆரம்பித்தார். ஐரோப்பிய நாடான பிரான்சு, தலைநகர் பாரிஸ் சென்று, தத்துவ ஞானியரைச் சந்தித்து உரையாடினார். எழுத்திலும், பேச்சிலும் ஆற்றல் மிக்கவராய் வளர்ந்தார்.பாரிசில் தெரேஸ் லீ வாஷீர் என்ற பெண்ணுடன் நட்பு கொண்டார்; திருமணம் என்ற சடங்கு எதுவும் இன்றி இருவரும் இணைந்து வாழ்ந்தனர். பிரெஞ்சு மொழி பத்திரிகை ஒன்று, 'அறிவியல் வளர்ச்சி மனித ஒழுக்கத்தை உயர்வு அடைய செய்துள்ளதா' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி அறிவித்திருந்தது. அதில் பங்கேற்றார் ரூசோ; அவர் எழுதிய கட்டுரை முதல் பரிசு பெற்றது.ஐரோப்பிய சமுதாய அமைப்பை விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தார் ரூசோ; இது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. சமுதாய ஒப்பந்தம், மலைக் கடிதங்கள், எமிலி என்ற நுால்களையும் எழுதினார். அவை புகழை தந்தன. கிராம வாழ்க்கையை அதிகம் நேசித்தார் ரூசோ. மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வைப் போக்கி, சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். பிரான்சு நாட்டில் புரட்சி உருவாக காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் ரூசோ. அவர் எழுதிய நுால்கள் ஒழுக்க கேட்டை கற்பிப்பதாக எதிர்ப்பு எழுந்தது. பாரீஸ் நீதிமன்றத்தில், எமிலி என்ற நுால் தீக்கிரையாக்கப்பட்டது.மனித உரிமை பற்றி எழுதப்பட்ட நுால், சமுதாய ஒப்பந்தம். அதில் ஏழைகளும், சாதாரண மக்களும் ஆட்சி புரிய உரிமை உள்ளவர்கள் என எடுத்து கூறினார் ரூசோ.மதம் சார்ந்த படிப்பு குழந்தைகளுக்கு அவசியமற்றது என்றும், கடவுள் குறித்து மட்டும் தெரிந்தால் போதும் என்றும் கூறினார். அவரது கருத்துக்களை சமயவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். 'நேர்மையுடன் வாழ வேண்டும்; ஒருவரை ஒருவர் ஏமாற்றக் கூடாது' என வலியுறுத்தினார் ரூசோ. அறியாமை என்ற இருளிலிருந்து மக்களை வெளிக்கொண்டு வர, வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். அரசின் மிரட்டலுக்கு பயப்படாமல் வாழ்ந்தார். எழுத்துக்களால் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ரூசோ, ஜூலை 2, 1778ல், தன், 66ம் வயதில் மரணம் அடைந்தார். மதவாதிகள் மற்றும் அரசின் அதிகார அடக்கு முறைகளுக்குப் பயப்படாமல், முன்னேற்றத்தையே லட்சியமாக கொண்டிருந்தார். அவர் புகழ், உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.