இந்தியாவில் உள்ள சரஸ்வதி கோவில்கள்!
அக்டோபர் 23, சரஸ்வதி பூஜைஎத்தனை செல்வங்கள் இருந்தாலும், அதற்கு அடிப்படையாக இருப்பது கல்வி தான். இதைத்தான், 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்...' என்கிறார் அவ்வையார். இதில், எண்ணுக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. எதுவும் தெரியாதவருக்கு கூட, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். கடையில் பொருள் வாங்குவதற்கு இந்த கணக்கு தான் உதவும். இத்தகைய பெருமை மிக்க கல்விக்கு தலைவியாக விளங்குவது சரஸ்வதி.சரஸ்வதி என்ற சொல் மிகவும் இனிமையானது. அதாவது, 'சரஸ்' என்றால் குளம் என்று பொருள். ஒரு குளத்தில் உள்ள நீர், மக்கள், பறவைகள், மிருகங்கள், மீன்கள் இன்னும் எல்லா உயிரினங்களுக்கும் பயன்படுகிறது. அதுபோல, கல்வியும் எல்லாருக்கும் பயன்படுகிறது. இதனால் தான், கல்வி தேவதைக்கு, சரஸ்வதி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சரஸ்வதியின் இருப்பிடம் வெள்ளைத் தாமரை. இந்த மலர், விரிந்து, பரந்து இருக்கும். அதன் கொடி குளத்தின் ஆழம் வரை சென்றிருக்கும். கற்கும் கல்வி மாசு மருவற்றதாக, ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இதை நினைவுபடுத்தும் விதமாகத் தான், வெள்ளைப் புடவை கட்டியிருக்கிறார் சரஸ்வதி.சில கோவில் பிரகாரங்களில், சரஸ்வதிக்கு சிலை இருக்கிறது. இந்தியாவில், 8 இடங்களில் சரஸ்வதிக்கு தனிக்கோவில்கள் உள்ளன. இவற்றில், சரஸ்வதி மட்டுமே தனித்திருக்கும் ஒரு கோவில் தமிழகத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் கூத்தனுாரில் உள்ள கோவிலே அது. இங்குள்ள சரஸ்வதி சிலை மற்ற கோவில்களில் உள்ளதை விட பெரியது. பழங்காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் என்ற புலவர் பற்றி படித்திருப்பீர். அவர் பெயரில் உள்ள, 'ஒட்டம்' என்பதற்கு, பந்தயம் என பொருள். இந்த புலவர் பந்தயத்தில் பங்கேற்று பாடுவதில் வல்லவர். இதனால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவர் தான், சரஸ்வதிக்கு கோவில் கட்டினார்; கோவில் இருக்கும் பகுதிக்கு, இவரது பெயரின் ஒரு பகுதியான கூத்தனுார் என அமைந்ததாக கூறுவர். இந்தியாவில் உள்ள சரஸ்வதி கோவில்கள் பற்றிய விபரம்...கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதா பீடத்தில் சரஸ்வதியே முக்கிய தெய்வம். சரஸ்வதிக்கு, 'சாரதா' என்ற பெயரும் உண்டு. காஷ்மீர் மாநிலத்தை, சாரதா தேசம் என்றே சொல்வர். அங்கே கல்விக்கூடங்கள் ஏராளம் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. சார்தா என்ற இடத்தில், சாரதா பீடம் என்ற பெயரில் கோவில் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், புஷ்கரில் சரஸ்வதியின் கணவர் பிரம்மாவுக்கு கோவில் இருக்கிறது. இங்கும் சரஸ்வதி இருக்கிறார். தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில், பசர் என்ற ஊரில் ஞான சரஸ்வதிக்கு கோவிலும், மேடக் மாவட்டம், வார்கல் பகுதியில் வித்யா சரஸ்வதி கோவிலும் புகழ் பெற்றவை. கேரள மாநிலம், கோட்டயம், பனச்சிக்காடு தட்சிண மூகாம்பிகா சரஸ்வதி, எர்ணாகுளம் வடக்கு பரவூர் தட்சிண மூகாம்பிகா கோவில்களில் சரஸ்வதியே முக்கிய தெய்வமாக அருள் பாலிக்கிறார். கல்விச் சுற்றுலாவாக இந்த கோவில்களுக்கு சென்று வாருங்கள். சிறப்பாகப் படிக்க சரஸ்வதியின் அருள் பெறுங்கள். கல்வித்திருநாள் வாழ்த்துகள்.- தி.செல்லப்பா