விஞ்ஞானி (18)
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் வாலஸ்டின். அவருடைய அறிவியல் அறிவின் சிறப்பைக் கேள்விப்பட்டிருந்த அயல்நாட்டு விஞ்ஞானி ஒருவர், அவரைச் சந்திக்க விரும்பி அவர் வீட்டுக்குச் சென்றார். அவரை அன்போடு வரவேற்றார் வாலஸ்டின்.அந்த வீடு ஒரு சிறிய குச்சி வீடுபோல இருந்ததைக் கண்ட அயல் நாட்டு விஞ்ஞானி, 'இந்தச் சிறிய வீட்டில் வாலஸ்டின் தம் சோதனைக் கூடத்தை எந்த இடத்தில் அமைத்திருப்பார்' என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு சுற்று, முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.''என்ன பார்க்கிறீர்கள்?'' என்றார் விஞ்ஞானி வாலஸ்டின்.''இல்லை... இவ்வளவு சிறிய வீட்டில் வசிக்கிறீர்கள்! இதுவரை நீங்கள் கண்டு பிடித்துள்ள விஷயங்களையெல்லாம் வைத்துப் பார்த்தால், உங்களுடைய ஆராய்ச்சிக்கூடம் மிகப் பெரிய ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த ஆய்வுக் கூடம் எங்கே? வெளியே எங்கேயாவது நிறுவியிருக்கிறீர்களா? நான் அதைப் பார்க்க வேண்டுமே!'' என்றார் அந்த அயல் நாட்டு விஞ்ஞானி.''அவ்வளவு தானே! பொறுங்கள்... என் பிரம்மாண்டமான ஆய்வுக் கூடத்தைக் காட்ட ஏற்பாடு செய்கிறேன்,'' என்றார் வாலஸ்டின்.சிறிது நேரத்தில் ஓர் உதவியாளன் அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தான். அவனிடம் வாலஸ்டின், மெதுவான குரலில் ஏதோ கூறினார். அவர் தலையை ஆட்டியவாறே உள்ளே சென்றான்.சற்று நேரத்தில் அந்த உதவியாளன் திரும்பி வந்தான். ஒரு தட்டில் சில குப்பிகளும், குடுவைகளும், வேறு சில சோதனைக் கூட உபகரணங்களும் இருக்க, அதை ஏந்தியவாறே அவர்கள் முன்னால் வந்து நின்றான்.அயல் நாட்டு விஞ்ஞானி அதை வியப்போடு பார்த்தார்.வாலஸ்டின் புன்னகையோடு, ''என்னுடைய பிரம்மாண்டமான சோதனைக் கூடத்தைப் பார்க்க வேண்டும் என்றீர்கள் அல்லவா? இதோ இருக்கிறது என் சோதனைக் கூடம். பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்றார் தன் உதவியாளன் கையிலிருந்த தட்டைக் காட்டி.வந்திருந்த அயல் நாட்டு விஞ்ஞானிக்கு, வியப்பும், திகைப்பும் நீங்க, பல நிமிடங்கள் ஆயின.இதி-லி-ருந்து என்ன தெரிகிறது குட்டீஸ்! இடம் பெரியதல்ல மூளை இருந்தால் போதும்னு புரியுதா குட்டீஸ்!