உள்ளூர் செய்திகள்

ஒற்றை ரூபாய் நாணயம்!

மதுரை மாவட்டம், மேலுார், எஸ்.எஸ்.வி.மெட்ரிக் பள்ளியில், 1986ல், 2ம் வகுப்பு படித்தேன். ஒருநாள் முற்பகலில், வகுப்பறையில் ஒற்றை ரூபாய் நாணயம் கிடந்தது. ஆசையில் அதை எடுத்து வைத்துக் கொண்டேன். அது தவறிவிட்டதாக, அருகில் இருந்த மாணவன், கண்ணீருடன் ஆசிரியரிடம் புகார் செய்தான். அவனை தேற்றி, 'மதிய உணவிற்குப் பின், அனைவரையும் சோதித்து பணத்தை பெற்றுத் தருகிறேன்...' என்றார் ஆசிரியர். மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றேன். வகுப்பறையில் கிடைத்த நாணயத்தை காட்டியதும், அது குறித்து விசாரித்தார் அம்மா. கடும் கோபத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை அரைத்து பிழிந்து, கண்களில் ஊற்றி, 'பிறர் பொருளை தொடக் கூடாது...' என தண்டித்து அறிவுரைத்தார். தவறை உணர்ந்து, அந்த நாணயத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்தேன். குற்ற உணர்வால் தலை குனிந்தேன்.இப்போது என் வயது, 42; அந்த சம்பவத்துக்கு பின், பிறர் பொருளுக்கு எப்போதும் ஆசைப்பட்டது இல்லை. நாணயமாக வாழ பழகிக் கொண்டேன். பண்பில் நாணயத்தை விதைத்த அந்த ஒற்றை ரூபாய் நாணயம், இன்றும் என் நினைவு அடுக்கில் உள்ளது.- ஜெயமாலா, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !