உள்ளூர் செய்திகள்

சின்ரல்லா! (1)

முன்னொரு காலத்தில் வாழ்ந்து வந்தாள் சிறுமி சின்ரல்லா; அவளுக்கு, ஐந்து வயதான போது, அம்மா இறந்து விட்டார். இரண்டாவதாக திருமணம் செய்தார் அப்பா. சித்தி பெயர் ரேணியா. மிகவும் பொல்லாதவள். சின்ரல்லாவை, படாத பாடு படுத்தினாள். வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தி, கொடுமையும் செய்தாள்.பாவம்... சின்ரல்லா. வேலை செய்ய முடியாமல் களைத்துப் போவாள்.உடனே, கம்பியை பழுக்க காய்ச்சி சூடு போட்டாள் சித்தி. எனவே, பயத்துடன் வேலைகளை செய்து முடிப்பாள்.ஒரு நாள் -'பசிக்கிறது சித்தி...' என்றாள் சின்ரல்லா.அவ்வளவு தான்... கோரமாகிவிட்டாள் சித்தி.'பசிப்பதாக இனி சொல்வாயா... நாக்கு ருசியை தேடுகிறதோ...'கோபத்துடன் கத்தியபடி, சூடு போட வந்தாள். ரத்தம் கசியுமளவு அடித்து நொறுக்கினாள். அதன்பின் பசி என்ற சொல்லையே உச்சரிக்க மாட்டாள் சின்ரல்லா.இவற்றை தட்டிக் கேட்காமல், 'சித்தி சொல்படித் தான் நடக்க வேண்டும்...' என்று அறிவுரைப்பார் அப்பா. அதை கடைபிடிக்க வலியுறுத்தி கூடுதலாக நான்கு அடியும் தருவார். கஷ்டத்தை யாரிடமும் சொன்னதில்லை சின்ரல்லா.வேலைகளை எல்லாம் முடித்த பின் அமைதியாக நிற்பாள். உடனே, 'சோற்றுக்கு பறக்கிறாயா...' என கரிப்பாள் சித்தி.அனைவரும் சாப்பிட்ட பின், மீந்திருக்கும் பழைய உணவை கொஞ்சம் தருவாள். அதில் உப்பு கூட போட்டிருக்காது. பணிவுடன் சாப்பிட்டு பேசாமல் போய் விடுவாள் சின்ரல்லா.ஆண்டுகள் கடந்தன -சித்திக்கு பெண் குழந்தை பிறந்தது. ஜெசிந்தா என பெயரிட்டனர். அதன் பின், மேலும் பொல்லாதவளாகி விட்டாள் சித்தி.சின்ரல்லாவுக்கு, ஒரு நிமிடம் கூட ஓய்வு கிடைப்பதில்லை. சாப்பாடும் சரியாக கிடைப்பதில்லை. மேலும் மேலும் வேலையும், அடி உதையும் தான் கிடைத்தன.சின்ரல்லாவுக்காக, ஊர்மக்கள் மிகவும் பரிதாப பட்டனர். ஆனால், சித்திடம் தட்டிக்கேட்க பயந்தனர். அவ்வளவு பொல்லாதவள்.கிழிசல் துணிகளும், பரட்டைத் தலையும் சின்ரல்லாவை பிச்சை எடுக்கும் சிறுமி போல காட்டின. மாறாக, ஜெசிந்தாவுக்கோ, தினமும் புதிய சட்டைகளை அணிவித்து, பால் சோறும், நெய் சோறும் ஊட்டினாள் சித்தி.அவள் சாப்பிடுவதை எட்டிப் பார்த்து விட்டால், சின்ரல்லாவின் முதுகுத்தோலை உரித்து விடுவாள். 'என் பிள்ளையே ஒன்றும் சாப்பிட மாட்டாள்; அதைப் பார்த்து பெருமூச்சு விடுகிறாயே! எவ்வளவு கொழுப்பு... உன் கண்ணில் நெருப்பை வைக்க வேண்டும்...' என, அடித்து நொறுக்குவாள்.சின்ரல்லாவிற்கு, 16 வயதானது. திடீரென்று இறந்துவிட்டார் அப்பா; அவ்வளவு தான்... வீட்டில் கொஞ்சம் இருந்த சுதந்திரமும் பறிபோனது. வீட்டின் ஒரு மூலையில் இரவில் படுக்க விடுவார் சித்தி; இப்போது அதையும் தடுத்துவிட்டார்.'தோட்டத்தில் படுத்துக் கொள்...' என, இரவில் வெளியே விரட்டி விடுவாள்.கிழிந்த பாயை விரித்து, தோட்டத்தில் ஒடுங்கிப் படுத்துக் கொள்வாள் சின்ரல்லா.பெரிய கட்டிலில் பஞ்சு மெத்தையைப் போட்டு மகளுடன் படுத்திருப்பாள் சித்தி. காலுக்கும், தலைக்கும் பட்டு தலையணை வைத்து கொள்வர்.இதைப் பார்த்து, 'ஒரு நாளாவது, இதில் படுத்து ஓய்வெடுக்க மாட்டோமா' என ஏங்குவாள் சின்ரல்லா.'நடக்கிற காரியமா... எதற்கு வீணாக ஆசை' அந்த எண்ணத்தை உடனே விலக்குவாள்.குளிரில் உடல் நடுங்கினாலும், சகித்தபடியே படுத்துக் கொள்வாள். தோட்டத்து செடிகள் எல்லாம் அவளை பரிவுடன் பார்த்தன.வானத்தில் பூக்கும் நட்சத்திரங்களும், நிலாவும், ' மினுக்' ஒளியால், அவளை சந்தோஷப்படுத்த முயன்றன.இயற்கை காட்சியை ரசித்தபடி துாங்கி விடுவாள் சின்ரல்லா.அன்று ஜெசிந்தாவிற்கு பிறந்த நாள். சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தாள் சித்தி. நண்பர்களுக்கு அழைப்பு தந்தாள். பல வகை இனிப்பு பதார்த்தங்கள் தயாராயின. அவற்றைப் பார்த்ததும், 'ஒரு துளியாவது கிடைக்குமா' என ஏங்கினாள் சின்ரல்லா.ஆனால் எட்டி பார்க்க கூட விடவில்லை. அந்தப்பக்கம் போனவளை அடித்து விரட்டினார்.விதியை நினைத்து, பேசாமல் இருந்து விட்டாள் சின்ரல்லா.பட்டு நுாலில் தயாரித்த உடையை அணிந்திருந்தாள் ஜெசிந்தா. அதில், முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன.வண்ண விளக்குகளால் ஜொலித்தது வீடு. பூக்களால் கோலங்கள் போடப்பட்டு இருந்தன. விருந்திற்கு, பெரும் பணக்காரர்கள் வந்திருந்தனர். அனைவரும், நடனம் ஆடி மகிழ்ந்தனர். சமையலறையில் சிறிய ஜன்னல் வழியாக இவற்றைப் பார்த்தாள் சின்ரல்லா. அவர்களுடன் நடனமாடும் ஆசை வந்தது.சித்தியை நினைத்ததும் பயத்தால் துடித்தது மனம்.திடீரென அந்தப்பக்கம் வந்த சித்தி, 'வேலையைப் பார்க்காமல், நடனத்தை ரசிக்கிறாயா...' என அடித்து காலில் சூடு போட்டாள்.வலி தாங்க முடியாமல் கதறினாள் சின்ரல்லா.'ஓடு... தோட்டத்தில் போய் கிட... இரவில் சாப்பாடு கூட உனக்கு இல்லை...'தோட்டத்தில் தள்ளி, கதவை சாத்தினாள் சித்தி.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !