சார்... கெட்ட வார்த்தை!
நான் வத்திராயிருப்பிலுள்ள தனியார் பள்ளியில், ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அரசினர் மாணவர் விடுதியில் தங்கிப் படித்தேன். 'லீடர்' ஆகவும் இருந்தேன். தினசரி காலை, 8:00 மணிக்கு, காலை உணவாக கஞ்சியும், அதற்கு தொட்டு கொள்ள துவையலும் கொடுப்பர். மற்ற விசேஷ நாட்களில் மட்டும் தான், இட்லி, வடை, பொங்கல் கொடுப்பர்.தினமும், விடுதியின் காப்பாளர், 'நன்றாய் இருக்கிறதா; கஞ்சிக்கு துவையல் வேண்டுமா; ஊறுகாய் வேண்டுமா...'என்று அவ்வப்போது கேட்பார்.திடீரென்று ஒரு மாணவன் எழுந்து, 'சார்... கஞ்சியில் கெட்ட வார்த்தை கிடக்கிறது...' என்று கூறி, 'மயிர்' - தலைமுடியை கையில் எடுத்து காண்பித்தான்.மாணவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து சிரித்தனர். விடுதிக்காப்பாளரோ, அந்த மாணவனின் மதிநுட்பத்தை பாராட்டி, சமையல்காரரிடம், அந்த மாணவனுக்கு வேறு தட்டில் கஞ்சி கொடுக்கும்படி கூறினார்.இப்போதும் வீட்டில் கஞ்சி சாப்பிடும் போது, அந்த நிகழ்ச்சியை நினைத்து சிரிப்பு தான் வரும்!- எ.மான்ராஜ், தம்பிபட்டி