உள்ளூர் செய்திகள்

அதிக மரம் உடைய நாடுகள்!

இயற்கைக்கு ஆதாரமாக உள்ளது மரங்கள். தொழிற்சாலை வெளியிடும் கார்பனை கட்டுப்படுத்தும்; இயற்கை வாழ்விடங்களை பாதுகாக்கும்; உலகில் பேரழிவை தடுத்து காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும். உலகில், 3 லட்சம் கோடிக்கும் அதிக மரங்கள் உள்ளதாக புள்ளி விபரம் உள்ளது. மனித பயன்பாட்டுக்கு அதிக அளவில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உலகில் அதிக மரங்கள் உடைய, நாடுகள் பற்றி பார்ப்போம்...ரஷ்யா: நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு ரஷ்யா. ஆசிய ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கியது. அதிக எண்ணிக்கையில் மரங்களையும் கொண்டுள்ளது. இங்குள்ள வனப் பகுதி, 82 லட்சத்து, 49 ஆயிரத்து, 300 சதுர கி.மீ., நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 45 சதவீதம் பல்வகை மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக உள்ளது. கனடா: வட அமெரிக்க நாடான கனடாவின் வனப்பகுதி, 49 லட்சத்து, 16 ஆயிரத்து, 438 சதுர கி.மீ., நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 30 சதவீதம் உள்ளது.பிரேசில்: தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடு இது. உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல மழைக்காடான அமேசானில், 60 சதவீத பரப்பு இங்கு உள்ளது. இந்த நாடு, 47 லட்சத்து, 76 ஆயிரத்து, 980 சதுர கி.மீ., பரப்பளவில் காடுகளை கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்த நிலப்பரப்பில், 56 சதவீதமாக உள்ளது.அமெரிக்கா: இங்கு, 31 லட்சத்து, 950 சதுர கி.மீ., பரப்பு காடுகளால் சூழப்பட்டுள்ளது. இது, மொத்த நிலப்பரப்பில், 30 சதவீதமாகும்.சீனா: ஆசிய நாடான சீனா அதிக மக்கள் தொகை உடையது. உலக அளவில் பெரிய நிலப்பரப்பும் உள்ளது. இங்கு, 20 லட்சத்து, 83 ஆயிரத்து, 210 சதுர கி.மீ., பரப்பளவு காடு உள்ளது. சுரங்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணியால் காடு அழிப்பு வேகமாக நடக்கிறது. நவீன தொழில் நுட்ப துணையுடன், பாலைவனப் பகுதியில் மரம் நட்டு காடாக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.ஆஸ்திரேலியா: இந்த நாட்டில், 14 லட்சத்து, 70 ஆயிரத்து, 832 சதுர கி.மீ., வன நிலப்பரப்பு உள்ளது.காங்கோ ஜனநாயக குடியரசு: இது மத்திய ஆப்பரிக்காவில் உள்ள நாடு. இங்கு காட்டின் பரப்பளவு 11 லட்சத்து, 72 ஆயிரத்து, 704 சதுர கி.மீ., பலவகை மரங்கள் உடைய பிராந்தியத்தில் உள்ளது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 52 சதவீதம் காடுகள் உள்ளன.அர்ஜென்டினா: இது தென் அமெரிக்கா கண்ட பகுதி நாடு. இங்கு பெரும்பாலான காடுகள் நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளன. இங்கு, 9 லட்சத்து, 45 ஆயிரத்து, 336 சதுர கி.மீ., அளவில் காடுகள் உள்ளதாக புள்ளி விபரம் உள்ளது. நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 32 சதவீதம் வனவிலங்குகளுக்கு முக்கிய தங்குமிடமாகவும், சுற்றுலாப் பயணிகளின் விரும்பும் பகுதியாகவும் காடுகள் உள்ளன.இந்தோனேசியா: தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு. இது, 8 லட்சத்து, 84 ஆயிரத்து, 950 சதுர கி.மீ., காடுகளை கொண்டுள்ளது. மொத்த நிலப்பரப்பில், 46 சதவீதம் பல்வேறு விலங்குகள் தங்குமிடமாக உள்ளது. அதிக மழைப்பொழிவால் காடுகள் செழித்து வளர்ந்துள்ளன.இந்தியா: உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. பல மரங்களின் தாயகமாக உள்ளது. இங்கு, 8 லட்சம் சதுர கி.மீ., பரப்பில் காடுகள் உள்ளன. அவை வன விலங்குகளுக்கு தங்குமிடமாகவும், இயற்கை மருந்து ஆதாரமாகவும் உள்ளன.மரங்களை அதிகமாக நட்டு காடு வளர்த்தால், புவி வெப்பமயத்தாலை தடுக்கலாம். சுற்றுச்சூழல் பாதிப்பு நிலையை எதிர்த்துப் போராடலாம். காற்றின் தரத்தை மேம்படுத்தலாம். பறவை, விலங்கு போன்ற உயிரினங்கள் பெருக வாழ்விடங்களை வழங்கலாம். மரங்கள் நட்டு பசுமை நிறைந்த எதிர்காலத்திற்கு பங்காற்றுவோம்.- வி.கவுதம சித்தார்த்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !