உள்ளூர் செய்திகள்

தினம் ஒரு செய்தி!

விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 2004ல், 10ம் வகுப்பு படித்த போது, தலைமையாசிரியராக இருந்தார், கனகரத்தினம். எப்போதும் பிரம்பை பிடித்தபடி பள்ளி வளாகத்தை சுற்றி வந்து கண்காணிப்பார். அவரை கண்டாலே அச்சத்துடன் ஓடி விடுவர், மாணவர்கள். இந்த நிலையில், இறை வணக்க கூட்டத்தில், செய்தி வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை பயன்படுத்தி, நாளிதழ்களில் படித்த பயனுள்ள தகவல்களை சிறப்பாக பகிர்ந்து வந்தேன். என்னை அழைத்து உற்சாகப்படுத்தியதால், தலைமையாசிரியருடன் நெருக்கம் ஏற்பட்டது. அன்றாடம் சந்தித்து அவர் கூறும் அறிவுரைகளை பின்பற்றி வந்தேன். இதனால், என்னுடன் பழகுவதை தவிர்த்தனர், சக மாணவர்கள். அதை பொருட்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினேன். கல்லுாரியில் சேர்ந்த போது, ஒழுக்க கண்காணிப்பு குழுவில் பொறுப்பு கிடைத்தது. ஒருமுறை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது, பழைய பேப்பர் வைத்திருந்த பகுதியில், திடீரென தீப்பிடித்தது. உடனடியாக, கல்லுாரி முதல்வருக்கு தகவல் கொடுத்தேன். மாணவர்கள் ஒத்துழைப்புடன், தீயை அணைத்து பாராட்டு பெற்றேன். என் வயது, 38. குடும்ப விழாக்களுக்கு, உணவு சப்ளை செய்யும், 'கேட்டரிங்' தொழில் செய்கிறேன். பள்ளியில் செய்தி வாசிக்க வாய்ப்பு அளித்து, வாழ்வில் உயர ஊக்குவித்த, தலைமையாசிரியர் கனகரத்தினத்தை போற்றுகிறேன். - க.லெனின், விழுப்புரம். தொடர்புக்கு: 75503 53493


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !