உள்ளூர் செய்திகள்

எலி!

மிகச்சிறந்த வீரனாக இருந்தான் அந்த நாட்டு இளவரசன். அண்டை நாடுகளுடன் நடந்த போர்களில் பங்கேற்றான். அவன் வாள் வீச்சுக்கு யாரும் ஈடு கொடுக்க இயலவில்லை. ஒ ரு நாள் - அரண்மனை வளாகத்தில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்தான் இளவரசன். குறுக்கே ஓடியது ஒரு எலி. கோபத்தில் அதன் மீது வாளை வீசி எறிந்தான். லாவகமாக தப்பியது எலி. மீண்டும் துரத்தியபடி வாளை வீசினான். வளைக்குள் புகுந்து கொண்டது எலி. மனம் உடைந்துப் போனான் இளவரசன். அங்கு வந்த மன்னர், 'ஏன் சோகமாக இருக்கிறாய்...' என கேட்டார். பதற்றமான மனநிலையில், 'நாட்டில் என் வாள் வீசும் திறமைக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாத போது, ஒரு சாதாரண எலியை கொல்ல முடியவில்லை...' என சம்பவத்தை விவரித்தான் இளவரசன். சிரித்தபடி, 'எலியைக் கொல்ல வாள் எதற்கு... அரண்மனையில் வசிக்கும் பூனை போதுமே...' என்றார் மன்னர். அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அது எலியை வேட்டையாட முயன்றது. ஆனால் எளிதாக தப்பி சென்றது எலி. இப்போது இளவரசனுடன் மன்னரும் சோகமானார். நாட்டின் மந்திரி அங்கு வந்தார். சோகத்திற்கான காரணத்தை விசாரித்தார். நடந்த விபரங்களை கூறினார் மன்னர். 'நம் நாட்டு பூனைகள் எதற்கும் லாயக்கற்றவை... ஜப்பான், பாரசீகம் நாடுகளில் பூனைகள், புலி அளவு உயரம் உள்ளன. அங்கிருந்து வரவழைப்போம்...' மந்திரி ஆலோசனைப்படி அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக்கப்பட்டன. அவற்றிடமிருந்தும் சாமர்த்தியமாக தப்பி வளைக்குள் புகுந்து வேடிக்கை காட்டியது எலி. 'எலிக்கு இவ்வளவு திறமையா...' நாட்டு மக்கள் வியந்தனர். இது கேட்டு, 'இந்த எலியை பிடிக்க ஜப்பான், பாரசீகப் பூனை எல்லாம் எதுக்கு... என் வீட்டில் வளர்ப்பதே போதும்...' என்றான் அரண்மனை காவலன். மன்னருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. 'அரண்மனையில் வளரும் பூனையால் முடியாத போது, சாதாரண காவலன் வளர்ப்பதால் எப்படி சாத்தியமாகும்...' கோபத்தில் கோட்டார் மன்னர். அவரை சமாதானப்படுத்திய இளவரசன், 'சரி... அழைத்து வா, உன் பூனையை...' என காவலனுக்கு உத்தரவிட்டான். பூனையை கொண்டு வந்தான் காவலன். அது ஒரே தாவலில், 'லபக்' என்று எலியை கவ்வி சென்றது. இளவரசனுக்கு பெரும் ஆச்சரியம். 'அரண்மனையில் வளர்ந்தவையிடம் இல்லாத திறமை, சாதாரண பூனைக்கு எப்படி வந்தது... என்ன விதமாக பயிற்சி கொடுக்கிறாய்...' வியந்து கேள்விகளை அடுக்கினான் இளவரசன். புன்னகையுடன், 'என் பூனைக்கு தனித்திறமை எதுவும் இல்லை. பயிற்சியும் கொடுக்கவில்லை... அது பசியில் இருந்தது. இரையை பிடித்துக் கொண்டது. அவ்வளவு தான்...' என எளிமையாக சொன்னான் காவலன். உண்மை நிலையை உணர்ந்தான் இளவரசன். அரண்மனையில் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் பசி தெரிய வாய்ப்பில்லை. அவற்றால் எலியை பிடிக்க இயலாது என்பதை அறி-ந்தான் இளவரசன். பட்டூஸ்... எது பற்றியும் தேடல் இருந்தால் கச்சிதமாகவும், வெற்றிகரமாகவும் முடிக்கலாம். எம்.ஏ.நிவேதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !