உள்ளூர் செய்திகள்

தங்க நாடோடி கூட்டம்!

மங்கோலிய பேரரசின் ஒரு பகுதி, தங்க நாடோடி என அழைக்கப்பட்டது. இந்த ஆட்சி, பட்டுகான் என்பவரால் கி.பி.1242ல் உருவாக்கப்பட்டது. ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் பரவியிருந்தது. இதை, கிப்ச்சாக் கானேட், ஜோச்சியின் உளூஸ் எனவும் அழைப்பர். மங்கோலிய இன மக்கள் அமைத்திருந்த தங்க வண்ணக் கூடாரங்களே, இந்த பெயருக்கு காரணமாகியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மக்களின் செல்வச் செழிப்பைக் குறிக்க, ஸ்லாவிய பழங்குடியினர், இப்பெயரை சூட்டியதாகவும் கருதப்படுகிறது. இந்த இன வரலாறு குறித்து பார்ப்போம்...ஜோச்சி என்பவருக்கு 40 மகன்கள். இதில் மூத்தவர் தான் பட்டுகான். நீலம், வெள்ளை, சாம்பல் நிற நாடோடி கூட்டங்களுக்கு தலைவராக இருந்தார். ஆசியா, ஐரோப்பிய கண்ட பகுதிகளில் தற்போது பல்கேரியா, உக்ரேன், ரஷ்யா அமைந்துள்ள நிலப்பரப்பை கைப்பற்றி ஆட்சி செய்தார். இவர் வென்ற பகுதிகளில் பேசப்பட்டது, கிப்ச்சாக் என்ற துருக்கிய மொழி. இதன் அடிப்படையில் ஆட்சி பரப்புக்கு கிப்ச்சாக் கானேட் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பேரரசு பல வெற்றிகள் ஈட்டிய போதும் வாரிசுரிமை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பேரரசு சிதறுண்டு, பல பகுதிகளாகப் பிரிந்து மறைந்து விட்டது. தங்க நாடோடிக் கூட்டம் பற்றிய தகவல், 13ம் நுாற்றாண்டின் புகழ் வாய்ந்த வரலாறாக உள்ளது.- நர்மதா விஜயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !