கின்னஸ் பறவை!
அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் உள்ளது அலாஸ்கா. இங்கு, பட்டை வால் மூக்கன் என்ற பறவை இனம் உள்ளது. இதை ஆங்கிலத்தில், 'பார் டெயில் காட்விட்' என்பர். குளிர் காலத்தில், நீண்ட துாரம் பறந்து ஆஸ்திரேலியா கண்டப் பகுதிக்கு வலசை செல்கிறது. இப்படி பறக்கும் போது அடிக்கடி ஓய்வு எடுப்பதில்லை. எப்போதாவது தான் தரை இறங்கும். அதுவும் தண்ணீர் பரப்பில் இறங்காது. ஏனெனில், இதன் உடலமைப்பு, தண்ணீரில் மிதப்பதற்கு ஏற்றவாறு இல்லை. தண்ணீரில் விழ நேர்ந்தால் இந்த பறவைக்கு இறப்பு நிச்சயம். இந்த பறவை இடம் பெயர்ந்து செல்வதை ஆய்வு செய்தனர் பறவையியல் அறிஞர்கள். அதில் ஒன்று அலாஸ்காவில் இருந்து, ஆஸ்திரேலியா டாஸ்மேனியா மாநிலத்துக்கு சென்றிருந்தது. அதன் பயண துாரம் 13 ஆயிரத்து, 560 கி.மீ., உணவு மற்றும் ஓய்வின்றி, 11 நாட்கள் தொடர்ந்து பறந்து சாதனை படைத்திருந்தது அந்த பறவை. இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளது. இரவு, பகலாக பறந்ததால் அப்பறவையின் உடல் எடை மிகவும் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.- வி.கவுதம சித்தார்த்