உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (267)

அன்புள்ள அம்மா...என் வயது, 11; அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படிக்கும் மாணவி. மனிதருக்கு பொறாமை, பிறவியில் வருகிறதா அல்லது பழக்கத்தால் வருகிறதா... இதை பற்றி யோசித்து, மனம் மிகவும் களைப்படைந்து விட்டது. பொறாமை நல்லதா, கெட்டதா என உணரமுடியவில்லை. பொறாமை தீயது என்று எல்லாரும் போதிக்கின்றனர். ஆனால், பொறாமையுடனே நடந்து கொள்கின்றனர். பொறாமை தீயது என்றால், அதை வெறுத்து ஒதுக்கும் வழிமுறைகள் பற்றி எடுத்துரையுங்கள்.இப்படிக்கு,-எஸ்.மாலினி.அன்பு மகளே...பிரஞ்சு மொழியில் உள்ள, 'ஜலுாக்ஸ்' என்ற வார்த்தையும், லத்தீன் மொழியில், 'ஜெலோசஸ்' என்ற வார்த்தையும் மருவி, 'ஜொலஸ்' என்ற ஆங்கில வார்த்தையாகி இருக்கிறது. இதுவே, பொறாமை என்ற பொருளில் தமிழ் மொழியில் வழங்கப்படுகிறது.கோபம், குரோதம், காமம், கனிவு, பொறாமை, நகைச்சுவை என, எல்லா வகை உணர்வுகளும், மரபியல் அணுவில் பதிந்துள்ளன. இவற்றை பதிந்து தான், இந்த பூமிக்கு அனைவரும் வருகிறோம். இவற்றில் கெட்ட உணர்வுகளை புறம் தள்ளி, நல்ல பண்புகளை நெஞ்சில் ஏந்தி செயல்படுவது தான், சிறந்த மனிதரின் மாண்பாக கொள்ளப்படுகிறது. தன்னிடம் இருப்பதை வைத்துக் கொள்ளும் விருப்பமும், இல்லாததை பெற வேண்டும் என்ற ஆசையும் ஒரு மனிதனின் இயல்பான குணங்கள்.வாழ்வதில் நிச்சயமற்ற தன்மை, தனிமை, செயல்களில் அவநம்பிக்கை, சுயமரியாதை குறைவு, நரம்பியல் முரண், யாருக்கும் எதையும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காத தன்மை, கைவிடப்படுவோமோ என்ற பயம், கல்வியறிவின்மை, பகுத்தறிவதில் நம்பிக்கை குறைவு, உணரப்பட்ட துரோகம் மற்றும் சந்தேக அணுகுமுறை அல்லது அடங்காத கோபம் போன்றவையே பொறாமை குணத்தை தீவிரப்படுத்தி, மனம் போன போக்கில் தலை விரித்து ஆட வைக்கின்றன.பொறாமை என்பது சமூகத்தில் பிற மனிதர்களிடம் கொள்ளும் உறவுகளில் ஒரு பொதுவான அனுபவமாக உள்ளது. மனதில் துளிர்க்கிறது. பொறாமையை, கலாசாரம் சார்ந்த உணர்ச்சியாக கொள்ளலாம். பொறாமை பாவச்செயல் என, அனைத்து மதங்களும் போதிக்கின்றன. பகுத்தறியும் திறனற்ற மிருகங்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு.திடீரென கிடைக்கும் பணம், புத்திசாலித்தனம், சமூகத்திறன்கள், மகிழ்ச்சியற்ற மனநிலை, பணியில் தீவிரமின்மை, ஆரோக்கியமற்ற சிந்தனை, ஆளுமை திறனின்மை, நுண்கலை திறன்கள் சார்ந்த குறைபாடு, சாதனையில் திருப்தியின்மை போன்றவற்றாலும் பொறாமை குணம் ஏற்படுகிறது. பொறாமைபடுவோருக்கு, உடலில், 'ஆக்சிடோசின்' அதிகம் சுரக்கிறது. உலகம் முழுக்க, 30 சதவீதம் பேர் பொறாமையை வெளிப்படையாக காட்டுகின்றனர். அதேநேரம், பொறாமைபட்டாலும், வெளிக்காட்டாமல் மறைத்துக் கொள்வோர் ஏராளம்.ஆரோக்கியமான பொறாமை என, ஒன்று உண்டு. சம வயதும், சம கல்வியும் உடையவர் உழைத்து பெரும் பதவி அடைகிறார். அவரைப் பார்த்து, சோம்பேறிதனத்தை தொலைத்து, 'நாமும் உழைத்து முன்னேறலாம்' என்பது ஆரோக்கியமான சிந்தனை.பொறாமை உணர்ச்சிக்கு உள்ளாகாமல் இருக்கும் வழிமுறைகளை பார்ப்போம்...* எதிராளியுடன் மனம் விட்டு பேசி பரஸ்பரம் நம்பிக்கை வளர்த்தல்* தன்னம்பிக்கையை மீட்டல்* நேர்மறை எண்ணங்களை வளர்த்தல்* தவறான புரிதலை விட்டொழித்தல்-* கண்ணியத்தை பேணுதல்* தேவைக்கு உதவி கோரல்* போதும் என்ற மனநிறைவு கொள்ளல். மேலே கூறியவை அனைத்தும் பொறாமையை போக்கும் மருந்துகள். பொறாமையின்றி வாழ இவற்றை கடைபிடித்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைவது உறுதி. இதுபோல், அபூர்வமான கேள்விகளை முன்வைத்து, சிந்தனையை கூர்மைப்படுத்திக்கொள்.-- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !