இளஸ் மனஸ்! (287)
அன்பு ஆன்டி...எனக்கு, 15 வயதாகிறது. பிரபல தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ, கற்பனை பெரும் தீங்குகளை விளைவிக்கும் என நம்புகிறேன். கற்பனை என்பது தீயகுணம் உடையவர்களின் பூமராங் ஆயுதம் என்றே எண்ணுகிறேன். கற்பனை செய்வதில் இருந்து விலகினாலே, அமைதியான வாழ்க்கை கிடைக்கும் என நம்புகிறேன். உலகில், நேர்மையாக வாழ்ந்தால் போதுமானது என உணர்கிறேன். இதில் குழப்பம் வருகிறது. தெளிவு பிறக்கவில்லை. இது பற்றி உங்கள் கருத்தை தெரிவித்து, என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்!இப்படிக்கு,கி.பால்பாண்டியன்.அன்புள்ள மகனுக்கு...வாலிபம் துவங்கும் பருவத்தில் இருக்கிறாய். ஆனால், 80 வயது முதியவர் போல யோசித்து, கேள்வி கேட்டுள்ளாய். உன் சிந்திக்கும் திறனை வளர்த்துள்ளதற்கு முதற்கண் வாழ்த்துகள். இதை மேலும் வளர்த்துக் கொள்.மனக் கண்களை திறந்து பார்ப்பதே கற்பனை. மனதில் உருவக்காட்சிகளை தோற்றுவிப்பதும், புதுக்கருத்துக்களை உருவாக்கும் ஆற்றலும் கற்பனைத்திறன் தான். இதற்கு முன், யோசித்தறியாத மனச்சித்திரங்களே கற்பனை. அது, தனித்துவ யோசனைகளை தந்து, கிளர்ச்சியை உருவாக்கும். கணக்கு வழக்கு இல்லாமல் குட்டி போடும். அது ஒளியின் வேகத்தை விட, எண்ண முடியாத மடங்கு பாய்ந்தோடும்.கற்பனைக் குதிரை முதுகில் ஏறி, அண்டத்தின் எந்த மூலைக்கும் நொடி பொழுதில் சென்று வர முடியும்.உலகில் வாழும் உயிரினங்களில், மனிதனுக்கு மட்டும் தான் கற்பனை சக்தி உள்ளது. இது, தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டது.கற்பனை திறன், இறந்த கால சம்பவங்களில் உள்ள கோணல்களை திருத்தி அமைக்கும். எதிர்காலத்தை வடிவமைப்பதில் உதவும். பிரச்னைகளை விரல் சொடுக்கிய நேரத்தில் தீர்த்து வைக்கும். படைப்பாற்றலை பிரசவித்தபடியே இருக்கும். லட்சியமுடன் திட்டமிடும் படைப்பாற்றலை மேம்படுத்தி, சிறந்த கலையாக மாற்றும்.கற்பனை உருவாக தேவைப்படும் காரணிகள் பற்றி பார்ப்போம்...* பெற்றோர் வளர்ப்பு முறையில் நெகிழ்ச்சி* ஆரம்ப பள்ளி ஆசிரியர், விளையாட்டு தோழர்கள் தரும் உற்சாகம்* விளையாட்டு மைதானங்கள் தரும் எழுச்சி* நாடகம், சினிமா தரும் துாண்டல்* புத்தக வாசிப்பு தரும் ஈர்ப்பு* சமூக கட்டுப்பாடுகளை மீறத்துணியும் கலக மனநிலை.கற்பனையை ஆக்கரீதியாக பயன்படுத்தினால், வானத்தில் புதிய நிலவுகளைப் பார்க்கலாம். கற்பனைத்திறன் அதிகம் உள்ளோர், கணக்கு பாடத்தை கடினமாக உணர்வர் என்பதாக சிலர் சொல்வர். அது பொய். கற்பனை கணிதத்தில் புதிய கதவுகளை திறக்கும்.பவுதிக விதிகளை மீறும் கற்பனை புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும். மனித குலத்துக்கு நன்மை சேர்க்கும். கெடுதி செய்யும் தொழில்நுட்பங்கள், தீயக்குணம் படைத்தவர்களின் வக்கிர மனதில் இருந்து பிறக்கிறது என எடுத்து கொள்ளலாம். உலகில், போர், பகை, அச்சம் உருவாக்குவோரை இந்த வரிசையில் சேர்க்கலாம்.சீரான கற்பனையே நல்ல உழைப்பு திறனைத் தருகிறது. சிறந்த லட்சியத்துடன், தனிப்பாதையில் பயணம் செய்ய அது உதவுகிறது. மனிதர்களிடையே இனிய உறவை ஏற்படுத்தும். கற்பனைத் திறன் உடையோர், சாதனையாளராக உருவாகலாம்.பட்டுப் புழுவிலிருந்து, வண்ணத்துப்பூச்சி எப்படி வெளி வருகிறது. அது, இயற்கையின் கற்பனை திறன்.நீ விரும்பியபடி வாழ, ஆக்கப்பூர்வ கற்பனையே உதவும். அதன் துணையுடன் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.