உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (289)

அன்புள்ள ஆன்டி...எனக்கு, 12 வயதாகிறது. பிரபல தனியார் பள்ளி ஒன்றில், 7ம் வகுப்பு படிக்கிறேன். என் அப்பா பணக்காரர் இல்லை. ஆனால், ஊர் மக்களிடம் பிரபலமானவர். அனைவருக்கும் வேண்டியவர். இதனால், ஒரு பிரச்னை எழுகிறது.ஊரில் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் விேஷசங்களுக்கு தவறாமல் அழைப்பு வந்து விடுகிறது. மாதத்துக்கு நான்கைந்து பத்திரிகைகள் வரும். ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது, 501 ரூபாயாவது மொய் வைத்து விடுவார்.அப்பாவிடம், 'நுாறு ரூபாய் வைத்தால் போதாதா...' என கேட்டால், 'விடும்மா... இது கவுரவ பிரச்னை...' என்று தட்டிக் கழித்து விடுகிறார். ஆனால், குடும்பத்தில் இது பெரும் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இதை போன்ற செயல்களை தடுக்க, 'மொய் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்' என்று அரசே தடை செய்தால் என்ன... தடையை மீறுவோருக்கு தண்டனை கூட கொடுக்கலாம். அரசு சட்டம் கொண்டு வரலாமே... அதற்கு ஏன் ஒருவரும் முயற்சித்து பரிந்துரைக்கவில்லை. தயவு செய்து விளக்கம் தாருங்கள்.இப்படிக்கு, ஆர்.மதுமிதா செந்தில். அன்பு மகளே...தமிழகத்தில், பல தலைமுறைகளுக்கு முன் நடந்த திருமண நிகழ்வுகளில், மணமக்களுக்கு அன்பளிப்பு தருபவர், உரத்த குரலில், 'இவ்வளவு தொகையை அன்பளிப்பாக தருகிறேன்' என மொழிவர். அதாவது, 'மொழிவது' என்ற சொல் மருவி, 'மொயி' என ஆகியது; அதுவும் மருவி, 'மொய்' ஆகியுள்ளது.குடும்ப நிகழ்வுகளில் மொய் என்பது, ஒரு முறைசாரா வாழ்த்து நடவடிக்கை. மொய் பல வகைப்படும். அது பற்றி பார்ப்போம்...* திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு போன்ற குடும்ப நிகழ்வுகளில் விரும்பிய பணத்தை தந்து வயிறு நிறைய சாப்பிடுவது* அடுத்து மொய் விருந்து. புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் சில பிரிவினரிடம் நடக்கிறது. அதன்படி, வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தோர், பொருளாதார நிலையில் தலைப்புற விழுந்தோர், ஆடி, ஆவணி மாதங்களில் மொய் விருந்து என்ற நிகழ்ச்சியை நடத்துவர்.மொய் விருந்தில் பங்கேற்க, ஜாதி, மதம், இன பேதம் கிடையாது. மொய்யாக கொடுக்கப்படும் பணம், வட்டி இல்லா கடன் வகையை சேர்ந்தது. விருந்தில் பெரும்பாலும், ஆட்டுக்கிடா கறியுடன் உணவு பரிமாறப்படும். ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் இதை நடத்த வேண்டும் என்பது சமூக விதியாக வகுக்கப்பட்டுள்ளது. அதற்குள் ஏற்கனவே வாங்கிய மொய் பணத்தை திரும்ப செலுத்தியிருக்க வேண்டும். மொய் விருந்தில் கோடிக்கணக்கான ரூபாய் கூட வசூல் ஆவது உண்டு. மொய் பணம், 100, 200, 1,000 என, மடங்குகளில் கூடுதலாக, ஒரு ரூபாய் சேர்த்து வைப்பர். இது ஏன் தெரியுமா...காகித பணத்துடன், மதிப்பான உலோக நாணயத்தை வைத்து, மொய்க்கு ஒரு மதிப்பை ஏற்படுத்துவர். முன்பு, வெள்ளி நாணயம் பயன்படுத்தப்பட்டது.மூன்றாவதாக -மரண மொய் என்ற புதிய வகை இப்போது வந்துள்ளது. துக்கம் விசாரிக்கும் போது, அந்த குடும்பத்துக்கு ஒரு தொகையை மொய்யாக தருவதை தான் மரண மொய் என சொல்லப்படுகிறது. இப்போது பிரபலமாகி வருகிறது.நீ சொல்வது போல, மொய் என்பது இப்போது வழிப்பறி கொள்ளை செயல்பாடு போல் மாறி விட்டது.சில குடும்பங்களில், 'இருபது ஆண்டுக்கு முன், நான், 1 பவுன் மோதிரம் மொய் வைத்தேன். இப்போது, அதையே என் விேஷசத்துக்கு மொய்யாக வை' என்பது போல் கட்டாயப்படுத்தும் பழக்கம் உள்ளது. அப்போதைய தங்கம் விலையுடன் இன்றைய நிலையை ஒப்பிட முடியாது.ஒரு யோசனை சொல்கிறேன் கேள்...உன் வீட்டுக்கு ஐந்து அழைப்பிதழ்கள் வந்தால், முக்கியமான இரண்டை மட்டும் தேர்ந்தெடுத்து, உன் அப்பா கலந்து கொண்டால் போதும்.பணத்துக்கு மாற்றாக அறிவு பரப்பும் புத்தகங்களை பரிசாக வழங்கலாம். இதை கடைபிடித்தாலே உன் வீட்டுக்கு வரும் அழைப்பிதழ்கள் முற்றிலும் குறைந்து விடும். மொய் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்த்து வாழ்வதே இன்பம்!- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !