உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (312)

அன்புள்ள அம்மா...என் வயது, 27; தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண். கணவரும் பணிக்கு செல்கிறார். எங்களுக்கு, 4 வயதில் மகன் இருக்கிறான். அவனுக்கு, 'ஐக்யூ' அதிகம். வீட்டுக்கு வரும் உறவினர், நண்பர்கள் முன்... என் மகனிடம், 'ஒன்... டு... ஹன்ட்ரட் வரை சொல்லு...' என்பார் என் கணவர். அது போல்... 'ஏ.பி.சி.டி... சொல்லு...' 'அன்னா... ஆவன்னா... சொல்லு...' 'இந்தியாவின் தலைநகரம் சொல்லு...' இது போல் திறன் காட்ட மகனை நச்சரிப்பார். மகனும் பத்துக்கு இரண்டு தடவை எதையாவது சொல்வான்; மீதி சமயங்களில் அழுதபடியே அறைக்குள் ஓடி விடுவான். 'மகனை படுத்தாதீர்...' என கூறினால், 'விடாப்படியாக பயிற்சி கொடுத்தால்தான் மேதை ஆவான்...' என்கிறார் கணவர். அவர் சொல்வது சரியா... ஒன்றுமே புரியவில்லை. சிறுவர்களை மேதையாக்குவது குறித்து தெளிவுபடுத்துங்கள். இப்படிக்கு, பர்வதம் மாயகிருஷ்ணன். அன்பு மிக்க சகோதரிக்கு... நீங்கள் எல்லாம் குரங்காட்டியாகவா இருக்கிறீர்கள். உங்கள் மகன் ஒரு குரங்கு என்றா நினைக்கிறீர். வருவோர் போவோரிடம் அவனை வைத்து வித்தை காட்டி காசு சம்பாதிக்கவா எண்ணுகிறீர். வெளியாட்களை பார்த்தால் 6 வயது சிறுவன் சங்கோஜப்படத் தானே செய்வான். உன் கணவர் செய்வது குடும்ப வன்முறை. வெளியாட்களிடம் மகன் திறமையை காட்டுவதால் தங்க பதக்கமா கிடைத்து விடப் போகிறது. வந்த விருந்தினர் வெளியே போனதும், 'சிறுவனை குருட்டு மனப்பாடம் பண்ண வச்சு, நம்ம கிட்ட கக்க விட்ருக்கான்...' என கிண்டலாக ஆலாபிப்பர். நீயும் உன் கணவரும் மகனுக்கு பொது அறிவு மற்றும் பாடங்கள் சொல்லிக் கொடுங்கள். வேண்டாம் என சொல்லவில்லை. எதையும் கட்டாயப்படுத்தாதீர். வெளி உலகத்துக்கு அவனை கண்காட்சி பொருள் ஆக்கி விடாதீர். மேதைமை என்றால் 10 விஷயங்களை மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பது அல்ல... எதையும் 'ஏன், எதற்கு, எப்படி...' என கேள்விகள் கேட்டு அறிவியல் மனோபாவத்துடன் அணுக பழக்குவதே மேதைமையின் அடையாளம். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பர். எல்லா பெற்றோருக்கும் அவரவர் குழந்தை மேதை தான்-... பேரழகு தான்... உங்கள் குழந்தை பற்றிய சமூகத்தின் பொது அபிப்ராயமே மெய்யான அளவீடு. கற்றல்... கற்றல்... ஊமை துாக்கத்துக்கு ஓலை வாங்கும் வரை கற்றல். கற்றலை பிறருக்கு சொல்லிக் கொடுத்தல்... இதுவே மேதைமையின் அடையாளம். கற்றுக்கொள்ளும் வேட்கையை கிரியா ஊக்கம் செய்யலாமே தவிர பலவந்தபடுத்தி திணிக்கக் கூடாது. வீட்டுக்குள் உன் மகனுக்கு கற்றுக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தவும். வீட்டுக்கு உறவினர்களோ நண்பர்களோ வந்தால் இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கவும், வணக்கம் சொல்லவும் பழக்கப்படுத்தவும். எதையும் காரண காரியங்களோடு ஆராய சொல்லிக்கொடுக்கவும். பாடப்புத்தகங்களுடன் சேர்த்து பொது அறிவு புத்தக்கள் வாசிக்கும் பழக்கத்தையும் உருவாக்கவும். ஒவ்வொரு நாளும் உணவுக்கு பின், 'காட்லிவர் ஆயில் கேப்ஸ்யூல்' கொடுக்கவும். அது மூளைவளர்ச்சிக்கு பயன்படும். தெரு சிறுவர்களுடன் தினம் 1 மணி நேரம் விளையாட அனுமதிக்கவும். சுயசுத்தம் பேண சொல்லிக்கொடுக்கவும். கண், காதுகளை திறந்து வைத்து வெளி உலகத்தையும், மக்களையும் உன் மகன் கூர்நோக்கு பண்ணட்டும். அதுவே அவனை சிறந்தவனாக உருவாக்கும். - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !