உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (323)

அன்புள்ள ஆன்ட்டி... எனக்கு, 17 வயதாகிறது; தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. உலகில் பாம்புகள் இல்லாத நாடு உள்ளதா... அந்நாட்டில் பாம்பு இல்லாமலிருப்பதற்கு என்ன காரணம். பாம்பு இல்லாத நாட்டில் வலுக்கட்டாயமாக கொண்டு போய் விட்டால் என்ன நடக்கும்... ஒரு நாட்டில் பாம்பு அதிகமாக இருப்பதற்கு காரணம் என்னவாக இருக்கும். என் கேள்விகளுக்கு பதில் கூறி தெளிவுபடுத்துங்கள். இப்படிக்கு, டி.மால்முருகன், திருநெல்வேலி. அன்பு மகனே... பாம்பு, ஊர்வன வகை விலங்கின பிரிவை சேர்ந்தது. பாம்புகளில், 3,600 வகைகள் உள்ளன. பாம்பு குளிர் ரத்தவகை ஊர்வன. உடல் தட்பவெப்பநிலையை வெளியில் ஒழுங்குபடுத்தும். பாம்புகள் மாமிச பட்சிணியாக உள்ளன. உலகில் மிகச்சிறியது நுால் பாம்பு. அது 4.10 அங்குலம் நீளத்தில் இருக்கும். மிக நீளமானது அனகோன்டா. அது, 32 அடி வளர்ந்திருக்கும். பாம்பின் ஆயுள், 30 ஆண்டுகள். அதற்கு வெளிப்புற காது கிடையாது. உள்காது தாடை எலும்புடன், 'கொலுமெல்லா' என்ற சிற்றெலும்பால் இணைக்கப்பட்டிருக்கும். பாம்பு தரை அதிர்வை காதால் கேட்கும். அது அலை வரிசையில், 80-,300 ஹெர்ட்ஸ் அதிர்வை உணரும் தன்மை கொண்டது. புவியியல் தனிமை, குளிர்கால நிலை அல்லது கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பல நாடுகளில் பாம்பு இல்லை. குறிப்பாக அண்டார்டிகாவில் பாம்பு இல்லை. ஆஸ்திரேலிய கண்ட நாடான நியூசிலாந்து, ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து மற்றும் அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடலில் பல தீவுகளில் பாம்பு இல்லை. நியூசிலாந்து, ஐஸ்லாந்து தீவுகள் புவியியல் ரீதியாக கண்டங்களிலிருந்து தனித்திருக்கின்றன. அங்கு பாம்பு குடியேறுவது கடினம். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் தான், உலகிலே பாம்பு இனங்கள் அதிகம் உள்ளன. இங்கு 438 வகை பாம்புகள் இருக்கின்றன. அடுத்து தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 420 வகை பாம்புகள் இருக்கின்றன. மூன்றாவது, தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, 376 வகை பாம்புகளை கொண்டுள்ளது. பாம்பு இல்லாத நாட்டில் வலுக் கட்டாயமாக கொண்டு போய் விட்டால் அது இறந்து விடும். இந்தியாவில் லட்சத்தீவுகளில் பாம்பு கிடையாது. இந்திய மாநிலங்களில் கேரளாவில் அதிக வகை விஷப்பாம்புகள் நடமாடுகின்றன. தட்பவெப்பம், மாறுபட்ட சுற்றுச்சுழல் அமைப்புகள், உண்ணுவதற்கு இரை போன்றவையே பாம்புகள் அதிகரிக்க ஏதுவான காரணங்களாகும். - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !