இளஸ் மனஸ்! (325)
அன்புள்ள ஆன்ட்டி, என் வயது, 13; அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி நான். மிகுந்த சோகத்தில் இருக்கிறேன். அழுதபடியே தான் இக்கடிதத்தை எழுதுகிறேன். நான் பிறந்த உடனேயே, என் அம்மா நோயால் பாதிக்கப்பட்டு ஜன்னி கண்டு இறந்து விட்டாராம். எனக்கு ஒரு அக்கா, 10ம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறோம். என்னிடம் கொஞ்சம் அன்பாகவும், பிரியமாகவும் நடந்து கொள்வாள் அக்கா. ஆனால், அவ்வப்போது கோபப்படுவாள். அம்மா இல்லாததால், அக்கா தலையில் அதிக வேலைப்பளு விழுந்துள்ளது. கூட மாட உதவி செய்ய, என்னை கூப்பிடுவாள். அக்கா சொல்வது போல், வேலையை நேர்த்தியாக செய்ய எனக்கு வராது. ஓங்கி, முதுகில் அறைந்து, 'உன்னால தாண்டி இந்த கஷ்டம் எல்லாம் வந்துள்ளது. நீ பொறந்து தான் அம்மாவை முழுங்கிட்ட... நீ பிறக்காமல் இருந்திருந்தால் எவ்வளவோ நல்லாயிருக்கும்...' என்று கூறி தலையில் குட்டுவாள். அப்பாவும் என்னை பார்த்தாலே எரிந்து விழுகிறார். பூஜை நாட்களில் எந்த பொருளையும் நான் தொடக் கூடாது என, ஒதுக்கி விடுகின்றனர்; நான் தொட்டால், வேலைகள் துலங்காது என வசைபாடுகின்றனர். என் அக்கா, அப்பா மட்டுமல்ல, உறவினர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்போர் எல்லாருமே என்னை வெறுக்கின்றனர். நானா ஆன்ட்டி என் அம்மாவை சாகடித்தேன்... அவருக்கு நானா ஜன்னி வரவழைத்தேன்... அம்மா இறந்ததுக்கு நானா காரணம்... ஒட்டு மொத்தமாக எல்லாரும் இப்படி என்னை வெறுக்குறதை பார்க்கும்போது, பேசாமல் செத்துடலாம் என்று தோணுது. இப்படிக்கு, - இதழ்யா அன்பு மகளே... உன் அப்பாவும், அக்காவும், அக்கம் பக்கத்தவரும் தான் புத்திகெட்டு பேசுகின்றனர் என்றால், நீயுமா இப்படி நினைப்பாய்... இன்னும் இதுபோன்ற பொல்லாங்கான மூடநம்பிக்கைகள், மக்களிடம் உள்ளன. பள்ளியில் படிக்கும் நீ, மற்றவர்களின் இது போன்ற பேச்சை மனதில் போடாமல், புறந்தள்ளிவிடு. படிப்பில் ஆழ்ந்து கவனம் செலுத்து. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருப்போர், பெண் குழந்தை பிறக்கும் போது கூட, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது உண்டு. உன் போன்று பழிச்சொல்லுக்கு உள்ளாகும் பெண், நன்றாகப் படித்து, வேலைக்குச் சென்று பணம் ஈட்டத் துவங்கினால், இது போன்ற மூடச் செயல்கள் அனைத்தும் காணாமல் போகும். உன்னை தலையில் துாக்கி வைத்து கொண்டாடத் துவங்குவர். பழம்பெரும் நடிகை சரோஜாதேவி கூட, ஒருமுறை பேட்டி ஒன்றில், 'நான் பெண்ணாக பிறந்ததால், என் தாத்தா உட்பட அனைவரும், என்னை பார்க்கவே மறுத்துவிட்டனர்...' என்று கூறியிருந்தார். பிற்காலத்தில் பிரபல நடிகையாகி, எவ்வளவு புகழ் பெற்றார் என்பதை உலகம் அறியும்! மறுக்கப்பட்டவர்களும், ஒதுக்கப்பட்டவர்களும் தான் சாதனையாளர்களாக மாறி, சரித்திரம் படைக்கின்றனர். வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறியுடன், பொல்லாப்பு சொற்களை புறந்தள்ளி, உத்வேகத்தை உள்ளுக்குள் ேஹாம குண்டமாக்கி, அக்கினியாக கணகணக்க வைத்து, அணைந்து போகாமல் காத்து, பெரும் யாகம் செய்து வெற்றி பெறுகின்றனர்! இதை நீ அழுத்தமாக மனதில் வைக்க வேண்டும்! மகாகவி பாரதி எழுதிய, 'மனிதர் நோக, மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ...' என்ற பாடலை எப்போதும் நினைவில் கொண்டு, 'எவர் எது கூறினும் நில்லேன்; அஞ்சேன்' என்று, படிப்பதில் கவனமாக இரு. உள்ளத்தை சுத்தப்படுத்தி, கல்வி என்ற விளக்கை ஏற்றி வைத்துக் கொள்! அதை அணையாமல் பாதுகாத்து, உறுதி என்ற நெய்யை மேலும் மேலும் ஊற்றி சுடர்விட்டு எரிய செய். நீ படித்து பட்டம் பெற்று, மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ, ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., சிவில் சர்வீஸ் அதிகாரியாகவோ, பேராசிரியையாகவோ உயர்ந்து நிற்கும்போது, இதே அப்பாவும், அக்காவும், உன்னை எப்படி தலையில் வைத்து கொண்டாடுகின்றனர் என்பதை பார்ப்பாய். உன் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்! - என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.