உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (327)

அன்புள்ள அம்மா, என் வயது, 39; கணவருடன் துப்புரவு பணி செய்து வருகிறேன். முழு நேரமும் டாஸ்மாக் கடையே கதி என்றிருப்பார் என் கணவர்; வேலையில் இருக்கும்போது கூட பாட்டில் வைத்திருப்பார். சம்பளத்தை அதற்கே செலவிடுகிறார். என் வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது. அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகள் முடித்து, 6:00 மணிக்கு பணிக்கு ஓடுவேன். சூப்பர்வைசர்கள் கூறும், வி.ஐ.பி., ஏரியாக்களில் பணி செய்த பின், வழக்கமாக ஒதுக்கப்பட்ட ஏரியாவுக்கு வந்து தெருவை சுத்தமாக்குவேன். வீடுகளில் வைத்திருக்கும் குப்பையை தரம் பிரித்து வண்டியில் எடுத்து செல்ல உதவுவேன். எங்கள் சம்பளம் எவ்வளவு என்பதை அனைவரும் அறிவர். கணவரின் வருமானம் முழுதும் டாஸ்மாக் கடைக்கு தான் செல்லும். சில நேரம் என்னிடம் சண்டை போட்டு என் பணத்தையும் அடித்து, பிடுங்கி சென்று விடுவார். இந்த நிலையில், பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மகன், 'எனக்கு இரு சக்கர வாகனம், மொபைல் போன் வேண்டும். இல்லையெனில் பள்ளிக்கு செல்ல மாட்டேன்...' என அடம் பிடிக்கிறான். இவற்றை வாங்க காசு தேவை. எங்கு செல்வேன். கஷ்டப்பட்டு தான் படிக்க வைக்கிறேன். 'நீ பிறந்தது முதல் இன்று வரை எவ்வளவு செய்திருக்கிறேன் தெரியுமா?' என்று மகனிடம் கேட்டேன். அதற்கு, 'நான் ஏன் தெரிஞ்சுக்கணும்... நானா உன்னை பெத்துக்க சொன்னேன். பெத்துக்கிட்டல்ல... அப்ப செய்து தான் ஆக வேண்டும். என்னுடன் படிக்கும் நண்பர்களிடம், மொபைல் போன் இருக்கிறது. அவர்களின் அப்பா, அம்மா வாங்கித் தர்றாங்களே...' என, கருணையற்று பேசுகிறான். நான் என்ன செய்ய... நல்ல அறிவுரை கூறுங்கள். இப்படிக்கு, - நா.நிலவரசி. அன்பு சினேகிதி... இந்த சிக்கலுக்கு, முழுக்க முழுக்க நீங்கள் தான் காரணம். ஆரம்பத்தில் இருந்தே, கஷ்டங்களை, பிள்ளைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டும். 'இது தான் நம் குடும்ப நிலைமை' என தெரியப்படுத்தி விட வேண்டும் . பிள்ளைகளை கண்காணிக்கா விட்டால், இப்படி வாய்க்கு வந்தபடி பேசும் பழக்கத்திற்கு உள்ளாகி விடுவர். நாம் கண்ணியமாகப் பேசினால், அந்தப் பழக்கம் பிள்ளைகளுக்கும் இருக்கும். நாம் குறை பேசும் குணம் கொண்டிருந்தாலோ அல்லது அக்கம்பக்கத்தவர் வீட்டு விஷயங்கள் குறித்து விமர்சனம் செய்யும் வழக்கம் கொண்டிருந்தாலோ, அதே பழக்கம் பிள்ளைகளுக்கும் தொற்றும். இப்படி தகாத பேச்சுக்களை பேசுவதைத் தவிர்க்க, மகன் இருக்கும்போதே, கண்டும் காணாதது போல, 'அந்த வீட்டுல ஒரு குழந்தை பிறந்திருக்கு... கடவுள் குடுத்த வரம்... நல்லா இருக்கணும் அந்தக் குழந்தை... கடவுள் தானே குழந்தையைப் பெற வைக்கிறாரு...' என, போனில் பேசுவது போலவோ அல்லது கணவரிடம் கூறுவது போலவோ, பேசுங்கள். மகன், மீண்டும் வாகனமும், போனும் கேட்டால், 'குடும்ப நிலைமையை புரிந்து கொள். நீ நல்லா படிச்சா, எங்களை போல துப்புரவு பணிக்கெல்லாம் வராம, நல்ல வேலையில சேரலாம்... நீ பசி இல்லாம படிக்கணும்... கவுரவமா உடை உடுத்தணும்... வீட்டு கஷ்டங்கள் ஏதும் தெரியாம நீ படிக்கணும்கிறது தான் என் ஆசை... அதுக்கான பணத்தை நான் சம்பாதிச்சிட்டிருக்கேன். கூடுதலா செலவு செய்ய என்னால முடியாது... 'பத்தாவது முடிச்சு, பிளஸ் 2விலும் நல்ல மார்க் வாங்கிட்டா, கவர்மென்ட் உனக்கு, மேலே படிக்கவும் வசதி ஏற்படுத்தி தரும்; சம்பாதிக்கிறதுக்கான தொழிலையும் கற்றுக் குடுக்கும். நீ விரும்புவதெல்லாம் வாங்கிக்கலாம்...' என, இதமாய், அதே சமயம் உறுதியாய் சொல்லுங்கள். புரிந்து கொள்வான் உங்கள் மகன்! - அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
நவ 08, 2025 17:28

சமீப காலமாக பிள்ளைகள் இந்த கேள்வியை பெற்றோரிடம் அதிகம் கேட்கிறார்கள் , அதுவும் ஒரு குழந்தை இருக்கும் வீடுகளில் அதிகம் இந்த கேள்வி பயன்படுகிறது , அதே 5 அல்லது 6 பெற்றுக்கொள்ளும்மதத்தவரில் இந்த சிக்கல் இருப்பதாக தெரியவில்லை . அந்த மதத்தினர் போல இருந்து விடலாம் என்றே நினைக்கிறேன்