உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்! (331)

பிளாரன்ஸ் ஆன்ட்டி, நான் சின்னப் பையன். என் தாத்தா கல்லுாரி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இரண்டு பெரியப்பாக்கள், மூன்று சித்தப்பாக்கள், அவர்களது மனைவி, குழந்தைகள் என்று கூட்டுக்குடும்பமாக தான் வசிக்கிறோம். என் அப்பா, சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள் சிகரெட் பிடிப்பர். அதனால், எனக்கும் சிகரெட் பிடிக்கும் ஆசை வந்தது. நான் ஆங்கில மொழியோடு, தமிழ்ப்புலமையும் பெற வேண்டுமென்பது, என் தாத்தாவின் விரும்பம். ஆங்கிலத்தில் சின்ன சின்ன கதைகளை கொடுத்து, அவற்றை தமிழில் மொழி பெயர்க்க செய்வார். நான், நன்றாக மொழி பெயர்த்தால் பரிசாக, 10 ரூபாய் தருவார். அதை எடுத்து சென்று, தெருக்கோடி பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி, யாருக்கும் தெரியாமல் புகைப்பேன். என்னிடம் பணம் இல்லாத போது, பெரியப்பாவின் சட்டை பாக்கெட்டிலிருந்து, சிகரெட்டை திருடி, ரசியமாக புகைப்பேன். ஒருநாள், பெரியப்பாவின் சட்டை பாக்கெட்டிலிருந்து நான் சிகரெட் எடுக்கும் போது, எதிர்பாராமல் அறைக்குள் நுழைந்தார் அவர். நான் பயத்தில் நடுங்கினேன். ஆனால், அருகில் வந்த அவர், சிகரெட் பாக்கெட்டை அப்படியே என்னிடம் கொடுத்து, 'சிகரெட் பிடிக்கிறதை விட, திருடுவது தப்புடா...' என்றார். ஆனால், அதை வாங்க மறுத்துவிட்டேன். இது பற்றி வீட்டிலுள்ள யாரிடமும் பெரியப்பா சொல்லவில்லை. ஆனால், எனக்கு குற்ற உணர்வு குறுகுறுக்கிறது. பெரியப்பா திட்டியிருந்தாலோ, அடித்திருந்தாலோ, வீட்டில் சொல்லி பெரிய விஷயமாக ஆக்கியிருந்தாலோ, மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என தோன்றி இருக்கும். பெரியப்பா செய்த அமைதியான செயலால், 'சிகரெட் பிடிக்க கூடாது...' என்கிற எண்ணம் ஏற்படுகிறது. பழகி விட்ட காரணத்தால் விடவும் முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் தவிக்கிறேன். படிப்பில் கவனம் போகவில்லை. என் பிரச்னைக்கு ஒரு வழி சொல்லுங்கள், ஆண்ட்டி! இப்படிக்கு, - சுரேஷ். அன்புள்ள சுரேஷ், சின்னப் பையன் என்று சொன்னாயே தவிர, உன் வயதை சொல்லவில்லையே... தாத்தா, உன் எழுத்தாற்றலுக்கு பரிசாக கொடுத்தது, 10 ரூபாய். நீ அதை சிகரெட் வாங்க உபயோகப்படுத்தியிருப்பாய் என்று தாத்தா நினைத்திருப்பாரா... நினைத்திருந்தால் கொடுத்திருப்பாரா... இந்த அளவிற்கு கொண்டு போகும் என, அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். தெரிந்தால், இதற்கு காரணமானது பற்றி வருத்தப்படுவார். உங்கள் வீட்டு ஆண்கள் அனைவரும் சிகரெட் பிடிப்பதை பார்த்து, உனக்கும் அந்த ஆசை வந்திருக்கலாம். பெரியப்பாவின் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு திருடுகிற அளவிற்கல்லவா அது, உன்னை கொண்டு போயிருக்கிறது. உன் பெரியப்பா அமைதியான முறையில் உன்னை திருத்தப் பார்த்திருக்கிறார். ஒருவகையில் இது காந்திய வழிமுறை தான். சிகரெட் பிடிப்பதே தப்பு என்கிற போது, திருடிப் பிடிப்பது இன்னும் தவறல்லவா... தவறு என்பதோடு, உடல் நலத்திற்கு மிகவும் கேடு என்பது உனக்கு தெரியாததா... நுரையீரலை வெகுவாக பாதிக்கும்; புற்றுநோய்க்கும் வழிவகுக்கும். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் என்பது போய், பழக பழக ஒன்று பத்தாகும். பின் ஒரு பாக்கெட் பத்து பாக்கெட்டாகும். எந்த பழக்கத்தையும் சுலபமாக ஆரம்பித்து விடலாம்; விடுவது தான் மிகவும் கடினம். சின்னப் பையன் நீ... இப்போதே இந்த பழக்கத்தை விட்டால் நல்லது. இல்லாவிட்டால் நுரையீரல் பழுதுபட்டு, மூச்சு விடுவதே சிரமமாகி விடும். இந்த சிகரெட் பழக்கம் காரணமாக வாய் புற்றுநோய் வந்து அவதிப்பட்டோரையும், சாப்பிட முடியாமல் ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்து வீட்டிலேயே கட்டிலோடு கிடந்தவர்களை எல்லாம் நான் அறிவேன். சிகரெட் ஆசை வரும்போதெல்லாம், ஒரு சாக்லெட்டை பிரித்து வாயில் போட்டுக் கொள். பின் சாக்லெட் பழகி, மெல்ல மெல்ல சிகரெட் என்பது மறந்தே போய் விடும். - அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !