இரவு பள்ளி!
கோவை, சிங்காநல்லுார் ராஜலட்சுமி மில்ஸ் உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 10ம் வகுப்பு படித்தேன். அப்போது தலைமையாசிரியராக இருந்த வெங்கடேசலு நாயுடு சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றவர். மிகவும் கண்டிப்பானவர். அவர் சிரிப்பதை பார்ப்பதே அபூர்வம். அவரது சீரிய முயற்சியால் மாணவர்களுக்கு இரவில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. வழக்கமாக வகுப்புகள் மாலை 4:30க்கு முடியும். உடனே, வீட்டிற்கு சென்று, மாலை 6:30 மணிக்குள் பள்ளிக்கு திரும்ப வேண்டும். இரவு 10:00 மணி வரை வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை படிக்க வேண்டும். அதை முறைப்படுத்தி கண்காணிப்பார் தலைமையாசிரியர். இரவில் திடீரென சோதனைக்கு வருவார். அது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, பள்ளிக்கு சற்று துாரத்திலே மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அங்கிருந்து நடந்து வந்து ஆய்வு செய்வார்.ஒவ்வொரு மாணவன் அருகிலும் அமர்ந்து, 'ஏதாவது உதவி வேண்டுமா...' என பரிவுடன் விசாரிப்பார். பிரச்னை இருந்தால் தீர்த்து உதவுவார். தொடர்ந்து படித்து முன்னேறினேன். கணிதத்தில் பட்டம் பெற்றதும் என்னை, அதே பள்ளியில் ஆசிரியராக நியமித்தார் தலைமையாசிரியர். என் வயது, 82. கணித ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். பின், அதே பள்ளியில் சில காலம் செயலராக பணிபுரிந்தேன். கண்டிப்பும், கடமை உணர்வும் மிக்க தலைமையாசிரியர் வெங்கடேசலு நாயுடுவின் கருணையால் இந்த நிலைக்கு உயர்ந்தேன். அவரிடம் கற்க கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். - ரா.நாராயணசாமி, கோவை.