வினோத தீவு! (5)
முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் நெருங்கிய தோழியர். பள்ளி ஆண்டு விடுமுறையை கொண்டாட குடும்பத்தினருடன் லட்சத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். பல இடங்களையும் சுற்றிப் பார்த்தனர். ஒரு தீவுப்பக்கம் பயணித்த போது வினோத குட்டி மனுஷனைக் கண்டனர். அவன் யாரையோ கண்டு அச்சப்படுவது கண்டு, அது பற்றி அறிய முயற்சி எடுத்தனர். இனி - ''நீ யாரை பார்த்து பயந்து ஓடினாய்... உன் பெயர் என்ன...'' ரனா கேட்டதும், குட்டி மனுஷன் முகத்தில் மீண்டும் பய உணர்வு படர்ந்தது. தயக்கத்துடன், ''எங்களை அடிமையாக வைத்து கொடுமைப்படுத்துகின்றனர்... என் பெயர் லியோ...'' என்றான் குட்டி மனுஷன். மிகுந்த தயக்கத்துடன் பேசுவது தெரிந்தது. இதற்குள், சிறுமியரை அழைக்கும் குரல் கேட்டது. 'படகு சரியாகி விட்டது... வாங்க போகலாம்...' அங்கிருந்து உடனே கிளம்பி திட்டமிட்டபடி எண்ணிய தீவுக்குப் போக வேண்டும் என்ற அவசரம் அதில் தெரிந்தது. அதை உணர்ந்த சிறுமியர், 'நாங்க இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் இங்கே இருப்போம். அதற்குள் உனக்கு தின்பண்டங்கள் வாங்கி வருகிறோம்...' என குட்டி மனுஷன் லியோவிடம் கூறி, அங்கிருந்து புறப்பட எத்தனித்தனர் ரீனாவும், மாலினியும். ''இனி எப்போ வருவீங்க...'' ஆர்வமுடன் கேட்டான் லியோ. 'எப்போது வருவோம் என்று சரியாக சொல்ல முடியாது. ஆனால், இதுபோல காலையிலே வர முயற்சிக்கிறோம்...' சரி என்பது போல் தலையாட்டினான் லியோ. சிறுமியர் இருவரும் படகை நோக்கி நடந்தனர். 'வினோத உருவம் உடையவனாக இருக்கிறானே' ரீனாவின் எண்ணம் முழுதும் லியோவை சுற்றியே வந்தது. படகில் உடனிருந்த வழிகாட்டியிடம், ''அங்கிள்.. நாம் இப்போது சென்றோமே அந்த தீவில் வசிப்போர் பற்றி ஏதாவது தெரியுமா...'' என கேட்டாள் ரீனா. ''ஏற்கனவே சொன்னேனே... இங்கு பழங்குடியின பெண்களைத்தான் எப்போதாவது படகோட்டிகள் பார்ப்பர். மற்றபடி அங்குள்ள ஆண்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவர்கள் தீவின் நடுப்பகுதியிலே இருப்பர். அங்கிருந்து வெளியில் வருவதேயில்லை. வெளியாட்களும் அங்கு செல்வதில்லை...'' ''இந்த தீவு மிகவும் அழகாக இருக்கிறது. சுத்தமான காற்று, கவரும் மணல் பரப்பு, இயற்கையான வனப்பகுதி... இவையெல்லாம் ரொம்ப பிடித்திருக்கிறது...'' ''ஆமாம் எனக்கும்...'' என்றாள் மாலினி. ''இன்னொரு நாள் இந்த தீவுக்கு வந்து கொஞ்ச நேரம் செலவிடலாமா...'' அப்பாவிடம் அனுமதி கேட்டாள் ரீனா. ''அதற்கென்ன வரலாம். ந ம் அடுத்து வேறு ஏதாவது ஒரு தீவுக்கு செல்லும் போது கொஞ்சம் முன்னதாக புறப்பட்டு இங்கு வரலாம்...'' அப்பா சொல்ல, ரீனாவும், மாலினியும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தப்பூர்வமாக சிரித்தனர். மறுநாளே அந்த தீவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. ஓட்டலில் புறப்படும் போதே நிறைய தின்பண்டங்களை எடுத்து வைத்தாள் ரீனா. மாலினியும், தன் பங்குக்கு கொஞ்சம் எடுத்து வந்தாள். அவற்றை தனியாக ஒரு பையில் வைத்திருந்தனர். அந்த தீவில் இறங்கிய வினாடியே, ரீனாவின் கண்கள் அங்கிருந்த மரங்களில் லியோவை தேடின. ''அப்பா... நானும், மாலினியும் அந்த மரங்கள் பக்கம் போகிறோம்; அந்த இடம் மிகவும் அழகாக இருக்கிறது...'' தந்தையிடம் அனுமதி கேட்டாள் ரீனா. ''சரி... கவனம்...'' ரீனா மற்றும் மாலினியின் பெற்றோர் கடற்கரையில் கூடாரம் அமைப்பதில் கவனம் செலுத்தினர். ரீனாவும், மாலினியும் மரங்களின் அருகில் வந்த போது, சலசலப்பு கேட்டது. லியோ தான் அங்கிருந்தான். சிறுமியரை பார்த்ததும் மலர்ச்சியுடன் கிளைகளில் தாவி, இறங்கி வந்தான். அவர்கள் கையில் இருந்த தின்பண்டப்பையை ஆர்வத்துடன் பார்த்தான். ''இவ்வளவும் எனக்கா...'' ''ஆம்... உனக்குத்தான்...'' ''ஆஹா... பிரமாதம்... எங்கள் கிராமத்துப் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன்...'' மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டான். ''உங்கள் கிராமம் எங்கே இருக்கிறது லியோ...'' ''தீவின் நடுப்பகுதிக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து பார்த்தால் தெரியாது...'' ''நீ மட்டும் ஏன் இவ்வளவு சிறிய உருவத்தில் இருக்கிறாய்...'' ''நான் மட்டுமல்ல... கிராமத்தில் ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் இருக்கிறோம். பெண்கள் தான் உயரமாக இருப்பர்...'' ''ஆச்சரியமாக இருக்கிறதே...'' ''இங்கு நீரூற்றில் கலந்து இருக்கும் ஒருவித ரசாயனம் காரணமாக ஆண்களின் வளர்ச்சி குன்றிப் போய் விட்டதாக சொல்கின்றனர்...'' ''உங்களுக்கு இது கஷ்டமாக இருக்கிறதா...'' ''முதலில் பிற மனிதர்களை பார்க்கும் போது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், சிறிய உருவம் பழகிப் போய் விட்டது. இதுதான் எங்கள் உருவம் என்றான பின் அதைப் பற்றி கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது...'' ''உங்கள் வீட்டுக்கு நாங்கள் வரலாமா...'' சிரித்தபடி கேட்டாள் மாலினி. ''வர முடியாது. பெரும்பாலும் வெளியில் உள்ளோர் இந்த தீவு கிராமத்தில் அனுமதிக்கப்படுவதில்லை...'' ''ஏன்?'' ''நாங்கள் உருவத்தில் சிறியதாக இருப்பதால் வினோதமாக பார்ப்பர். உருவ கேலி செய்வர். அதெல்லாம் எங்களுக்கு பிடிக்காது. அதனால், ஆண்கள் யாரும் வெளிநபர் கண்ணில் படுவதில்லை. அதை எல்லாம் விட முக்கியமாக எங்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஆட்கள் வெளிநபர் எவரையும் இந்த தீவினுள் அனுமதிப்பதில்லை...'' ''உங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அந்த ஆட்கள் யார்...'' மாலினி கேட்க, அவன் முகத்தில் திகில் பரவியது. ''அவர்கள் எங்கள் கிராமத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். நாங்கள் எல்லாரும் அவர்களது அடிமைகள்...'' ''அடிமைகள் என்றால்...'' ''அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும்...'' ''என்ன மாதிரி வேலை...'' அதற்கு லியோ சொன்ன பதில், சிறுமியருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்தது. - தொடரும்... நரேஷ் அருண்குமார்