உள்ளூர் செய்திகள்

வினோத தீவு! (11)

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற போது, குட்டி மனுஷங்களை அடிமையாக வைத்திருப்பதை அறிந்து ஆசிரியை ஜான்வி உதவியுடன் மீட்கும் திட்டம் வகுத்தனர். குட்டி மனுஷங்களின் தலைவரை சந்தித்து பேசினர். பின் சுரங்கம் அமைந்திருந்த இடத்தை ஆய்வு செய்து சந்தேகங்களை கேள்வியாக எழுப்பினாள் ரீனா. இனி - சு ரங்கம் அமைந்த பகுதியை, குட்டி மனுஷங்களின் தலைவர் கோயா சுட்டிக்காட்டியதும் வியப்புடன் பார்த்தனர் ரீனாவும், மாலினியும். சுரங்கம் இருப்பதற்கு எந்த அறிகுறியும் அங்கு தெரியவில்லை. இரண்டு கூடாரங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. அவை காய்ந்த இலை தழைகளால் மூடி மறைக்கப்பட்டு இருந்தன. சற்று துாரத்தில் பெரிய கன்டெய்னர் இருந்தது. அதன் மீதும் இலை தழைகள் போடப்பட்டிருந்தன. ஒரு கூடாரத்துக்குள் லியோ மற்றும் கோயா போல குட்டி மனுஷங்கள் கும்பலாக அமர்ந்திருந்தனர். எல்லாரும் சுரங்க தொழிலாளர்கள் என்பதை, ரீனாவும் மாலினியும் புரிந்து கொண்டனர். இரண்டாவது கூடாரத்தில் மடக்கு நாற்காலிகள் ஐந்து போடப்பட்டிருந்தன. அதில் இரண்டு காலியாக இருந்தன. மற்ற நாற்காலிகளில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். ஒரு சின்ன மேஜை போட்டு அதன் மீது, 'லேப்டாப்' வைத்து ஒருவன் பார்த்து கொண்டிருந்தான். அருகே இன்னொரு மேஜையில், பிளாஸ்க், தண்ணீர் பாட்டில், டிபன் கேரியர் இருந்தன. சற்று தள்ளி நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் இருவர். ''இரண்டு கூடாரங்கள் இருக்கின்றனவே...'' ரீனா கேட்டாள். ''ஆம்... ஒன்றில் எங்களை வேலை ஏவுவோர் அமர்ந்திருக்கின்றனர்... அந்த கூடாரத்தில் இருந்து தான் சுரங்க வேலையை கவனிப்பர். இன்னொன்று நாங்கள் அமர்ந்து மண்ணையும், ரத்தினத்தையும் பிரிப்பதற்கானது. அங்கே எங்கள் ஆட்கள் இருக்கின்றனர் பாருங்கள். நாங்கள் ஒன்றாக கூடுவதும், ஓய்வெடுப்பதும் அங்கு தான். சற்று துாரத்தில் இருக்கும் கன்டெய்னரில் உபகரணங்கள் வைத்திருக்கின்றனர். அங்கு தான் உணவு சமையல் செய்வர்...'' ''அந்த மூன்று பேர்...'' ''அவர்கள் தான் சுரங்கக்காரர்கள். லேப்டாப்பை பார்த்து கொண்டு இருக்கும் பச்சை சட்டை போட்டிருப்பவன் பெயர் அன்பரசன். அன்பு என்று கூப்பிடுவர். அவன் தொழில்நுட்ப ஆசாமி. எப்போதும் லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருப்பான்... ''பேசிக் கொண்டிருக்கும் இருவரில் உ யரமாக இருப்பவன் பெயர் ஜான் எரிக்சன். அவனை எரிக்சன்னு கூப்பிடுவர். மூன்றாவதாக இருப்பவன் ஆண்டனி. அவர்கள் இருவரும் காவல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். சமையல் பணியையும் அவர்கள் தான் கவனிக்கின்றனர்...'' இவ்வாறு துாரத்தில் இருந்தே சுரங்கக்காரர்களை அறிமுகப்படுத்தினார் கோயா. ''எல்லாரும் முரட்டுத்தனமாக இருப்பது போல் தோன்றுகிறதே...'' சந்தேகத்தை நிவர்த்திக்கும் வகையில் கேட்டாள் மாலினி. ''அவர்களைப் பார்த்தாலே எல்லாருக்கும் பயம் தான்; இவர்களை தவிர, இன்னும் இரண்டு பேர் உண்டு... இப்போது அவர்கள் தீவை விட்டு வெளியே சென்றிருக்கின்றனர்...'' குறுக்கிட்டு சொன்னான் லியோ. அங்கிருப்போர் தோற்றத்தைப் பார்த்ததும், 'இவர்களை எப்படி சமாளிக்க போகிறோம்' என தோன்றியது மாலினிக்கு. ''சரி... நீங்கள் சொல்லும் ரத்தினச்சுரங்கம் எங்கே இருக்கிறது...'' கேட்டாள் ரீனா. ''நான்கு கற்கள் வைக்கப்பட்டிருக்கிறதே... அவற்றின் நடுவில் தான் சுரங்க வாசல் இருக்கு...'' ''அங்கே சுரங்கம் இருக்கிற மாதிரியே தெரியலையே...'' ''அந்த சுரங்கத்தோட வாசலே, 2 அடி அகலம் தான் இருக்கும். அதுக்குள்ளே இறங்கி தான், ரத்தினம் எடுத்து வருவோம்...'' ''சுரங்கம் என்றதும் நான் வேறு மாதிரி கற்பனை செய்தேன். இந்த இடத்தைப் பார்த்தால் ஒரு கிணறு அளவு கூட இருக்காது போல் தெரிகிறது...'' ''நீ சொல்வது சரி தான் ரீனா. சுரங்கம் என்பதற்கான எந்த அறிகுறியும் அங்கே இல்லை...'' என்றாள் மாலினி. ''இன்னொரு சுரங்கம் எங்கே இருக்கிறது...'' ''ஏற்கனவே தோண்டியதா...'' கேட்ட கோயா, அவர்களை மரங்களின் ஊடாகவே பக்கவாட்டில் அழைத்துச் சென்று, கட்டாந்தரையாக கிடந்த இன்னொரு பகுதியை காட்டினார். ''ரொம்ப பக்கத்திலே இருக்கிறதே...'' ''இது தான் முதலில் தோண்டிய சுரங்கம்...'' ''இதை மூடி விட்டனரா...'' ''அப்படியே தான் இருக்கிறது. இது புழக்கத்தில் இல்லை. இதன் நுழைவாயிலும் சின்ன பொந்து போல தான் இருக்கும். மூடவெல்லாம் தேவையில்லை. இந்த பகுதிக்கு எப்போதாவது தான் வருவர். மற்றபடி இங்கு ஆள் நடமாட்டம் இருக்காது...'' சொன்னதும் முகம் மலர்ந்தாள் ரீனா. அவள் மனதும் பரபர என திட்டங்களை தீட்டியது. ''கோயா... நீங்கள் என்னை சந்திக்க வந்த விஷயம் உங்கள் ஆட்களுக்கு தெரியுமா...'' ''எல்லாருக்கும் தெரியாது; எங்கள் இனக்குழு தலைவர்களிடம் மட்டும் சொல்லி இருக்கிறேன்...'' ''இனக்குழு தலைவர்கள் என்றால்...'' ''நப்தலி, அபியான்னு ரெண்டு பேருடன் நானும் இனக்குழு தலைவர்களாக இருக்கிறோம். நான் மூத்தவன். எந்த ஒரு முடிவானாலும் மூன்று பேரும் சேர்ந்து தான் எடுப்போம். நல்லதோ, கெட்டதோ எங்கள் இன மக்கள் எல்லாரும் அதற்கு கட்டுப்படுவர்...'' ''அந்த இருவரும் எங்கே இருக்கின்றனர்...'' ''வழக்கமாக அவர்களுடன் நானும் சேர்ந்து சுரங்கத்தின் உள்ளே வெடி மருந்துகளை பொருத்துவோம். இன்று நான் செல்லாததால், இருவரும் சுரங்கத்தினுள் வெடி மருந்து பொருத்தும் பணியில் ஈடுபட்டிருப்பர்...'' ''சுரங்கக்காரர்களின் பிடியிலிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறதா...'' ''எல்லாருக்கும் இருக்கிறது. எப்படியாவது இவர்கள் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என, பல காலமாக நினைக்கிறோம். ஆனால், வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். லியோ தான் உங்களைப் பற்றி சொன்னான்...'' ''எப்படி இவர்கள் பிடியில் சிக்கினீர்கள்...'' ''இங்கு வந்திருந்தோர் தொண்டு நிறுவனம் என்ற பெயரை சொல்லித்தான் அறிமுகமாயினர். எங்கள் குடியிருப்புகளை சரி செய்து கொடுப்பதாக கூறினர். நாங்களும் நம்பிவிட்டோம்...'' ''குடியிருப்பு கட்டிக் கொடுத்தனரா...'' ''மண் வீடுகளையும், மரக்கூரைகளையும் அமைத்து கொடுத்தனர்...'' ''நல்லது தானே...'' ''அது தான் பிரச்னையின் ஆரம்பமே... சேவையாக கட்டிக்கொடுக்கின்றனர் என எண்ணினோம். ஆனால், கட்டி தந்த வீடுகளுக்கு ஈடாக எங்களை கொத்தடிமைகளாக சுரங்கத்தில் வேலை செய்ய வைத்து விட்டனர்... மேலும்...'' தயங்கினார் கோயா. - தொடரும்... நரேஷ் அருண்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !