உள்ளூர் செய்திகள்

வினோத தீவு! (12)

முன்கதை: சிறுமியர் ரீனாவும், மாலினியும் விடுமுறையில் லட்சத்தீவுகளுக்கு சுற்றுலா சென்ற போது, குட்டி மனுஷங்கள் அடிமையாக இருப்பதை அறிந்து ஆசிரியை ஜான்வி உதவியுடன் அவர்களை மீட்கும் திட்டம் வகுத்தனர். அந்த வினோத தீவில் பழங்குடியின குட்டி மனுஷங்கள் அடிமையாக வேலை செய்த சுரங்கம் அமைந்திருந்த இடத்தை பார்த்து விசாரித்தனர். தொண்டு நிறுவனம் பெயரில் அடிமைப்படுத்தியதாக தெரியவந்தது. குட்டி மனுஷங்களின் தலைவர் ஒருவரிடம் பேசினர். இனி - ''மேலும் என்ன பிரச்னை...'' ''எங்கள் இனப் பெண்களிடமும், சுரங்கம் நடத்துவோர் கண்ணியமாக நடந்து கொள்வதில்லை...'' வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார் பழங்குடியின தலைவர்களில் ஒருவரான கோயா. ''கவலைப்படாதீர்... உங்கள் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு கண்டுவிடலாம்...'' நம்பிக்கை ஊட்டினாள் மாலினி. ''நல்லது...'' என பழங்குடியின தலைவர் சொல்ல தலையசைத்த ரீனா, ''சுரங்கக்காரர்களிடம் என்ன சொல்லி வந்திருக்கிறீர்...'' என்று கேட்டாள். ''எனக்கு சற்று உடல் வலியாக இருக்கிறது. அதனால், கஷாயம் குடித்துவிட்டு ஓய்வெடுக்க போகிறேன் என்று சொல்லி இருந்தேன்...'' ''நீங்கள் இப்போது மீண்டும் அங்கே போக முடியுமா...'' ''இப்போதா...'' ''ஆம்... இன்னும் எட்டு நாட்கள் தான் இருக்கிறது. அதற்குள் சுரங்கக்காரர்களை முறியடித்து, அவர்கள் பிடியில் இருந்து உங்களை மீட்க வேண்டும். அதற்கு முன், உங்கள் ஆட்களிடம் தகவலை சொல்லி, சுரங்கக்காரர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள். அவர்களின் ஒத்துழைப்பு முக்கியம்...'' இப்போது லியோ குறுக்கிட்டான்... ''எங்கள் இனத்தவரை கட்டுப்படுத்துவது இனக்குழு தலைவர்கள் தான். அவர்களின் பேச்சுக்கு இனத்தவர் எல்லாரும் கட்டுப்படுவர். சுரங்கக்காரர்களின் கொடுமையில் இருந்து விடுபடவே எல்லாரும் விரும்புகின்றனர்...'' ''அப்படியானால் சரி...'' என்ற ரீனா, மீட்கும் திட்டத்தை விவரிக்க துவங்கினாள். அதை கேட்ட கோயாவுக்கும், லியோவுக்கும் நம்பிக்கை வந்தது. அவர்கள் முகத்தில் சோகம் கலைந்து மகிழ்ச்சி பரவியது. ''நான் இப்போதே கிளம்புகிறேன்...'' சுரங்கத்தை நோக்கி புறப்பட்டார் கோயா. ரீனா, மாலினி, லியோ மூவரும் அவர் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தனர். வேலைக்கு திரும்பிய கோயாவை கேள்விக்குறியுடன் பார்த்தனர் கூடாரத்தில் இருந்தோர். ''உடல்நலம் இல்லை. லீவு என்று சொன்னாயே...'' சுரங்கக்காரர்களில் ஒருவனான அன்பரசன் கேட்டான். ''ஐயா... கஷாயம் குடித்ததும் உடல் கொஞ்சம் பரவாயில்லை, அதனால் வந்து விட்டேன்...'' ''இன்று ஓய்வெடுத்து நாளை வர வேண்டியது தானே...'' என, குறுக்கிட்டான் சுரங்ககாரர்களில் ஒருவரான ஆண்டனி. ''என்றைக்கு இருந்தாலும் இந்த வேலையை நான் தானே ஐயா செய்தாக வேண்டும். அதனால் தான் வந்தேன்...'' என்ற கோயாவை கொஞ்சம் சந்தேகமாகவே பார்த்தான் அன்பரசன். ''சரி வா...'' என்ற ஆண்டனி அவருக்குரிய ஆக்சிஜன் குழாயை கொடுத்தான். கோயா அதை மாட்டிக்கொண்டதும் நெற்றியில் ரிமோட் கேமராவைப் பொருத்தினான். தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த ரீனாவுக்கு, வீடியோ கேமராவை பார்த்த நொடியிலே பதற்றம் வந்தது. ஆக்சிஜன் சிலிண்டரை முதுகிலும், ரிமோட் கேமராவை நெற்றியிலும் பொருத்திக்கொண்ட கோயா, சுரங்கத்தின் நுழைவுப் பகுதிக்கு வந்தார். அவரைப் போன்ற சிறிய உடல்வாகு கொண்டவர் மட்டுமே இறங்க கூடிய அளவிற்கு இருந்த சுரங்கத்தில், முதலில் கால்களை செலுத்தினார். உள்ளே இருந்த மேடான பகுதியில் உறுதியாக நின்று உடலை உள்ளுக்குள் இழுத்து சுரங்க பகுதிக்குள் வந்தார் கோயா. அவரை பார்த்ததும் உள்ளே இருந்த மற்ற தலைவர்களான நப்தலி, அபியா இருவருக்கும் வியப்பாக இருந்தது. உள்ளே இறங்கிய கோயாவை நெருங்கி மூவரும் ஒன்று கூடினர். ''என்ன ஆச்சு...'' என்பது போல பார்வையால் கேட்டான் அபி. 'ஆம்' என்பது போல தலையசைத்தார் கோயா. கேமரா கண்காணிப்பில் இருந்ததால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ''வெடி மருந்து வைத்தாகி விட்டதா...'' ''இப்போது தான் வைத்துக் கொண்டிருக்கிறோம்...'' என்றான் நப்தலி. ''கொடுங்கள் நான் வைக்கிறேன்...'' என வெடி மருந்தை கேட்டார் கோயா. ''பரவாயில்லை நீ ஓய்வெடு...'' ''வேலையை முடிக்க நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செய்ய வேண்டும். கேள்வி கேட்காமல் கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். இப்படி எல்லாம் செயல்பட்டால் திட்டமிட்ட காலத்தில் சுலபமாக முடிக்க முடியும்...'' என்று கூறி, கட்டாயமாக வெடி மருந்தை வாங்கி கொண்டார் கோயா. சம்பந்தமில்லாத நேரத்தில் தொடர்பு இல்லாத வார்த்தைகளை பேசுவதைக் கேட்ட இருவரும் நிதானித்தனர். அவர் சந்தித்து விட்டு வந்த பெண்கள் கூறிய ஏதோ ஒரு விஷயம் தொடர்பானது என்பதை புரிந்து கொண்டனர். பக்கவாட்டு சுவரில் சிறு துளைகளை அமைத்து வெடி மருந்தை பொருத்தி திரிகளையும் இணைத்தனர். கொடுக்கப்பட்ட வெடி மருந்து முழுதையும் துளைகளில் வைக்காமல், பாதி அளவுக்கு மட்டுமே கோயா பயன்படுத்தியதை நப்தலி கவனித்தான். இதில் ஏதோ திட்டம் இருக்கிறது என புரிந்து அமைதியானான். வெடி மருந்தை பொருத்திய பின் வெளியில் வந்தனர். வெளியிலிருந்து லேப்டாப் வழியாக கண்காணித்து கொண்டிருந்த எரிக்சன் சந்தேக கண்ணுடன் பார்த்தான். ''உள்ளே என்ன நடக்கிறது...'' கொஞ்சம் அதட்டலாக கேட்டான். ''சுரங்கத்தை தோண்ட வெடி மருந்து வைத்திருக்கிறோம்...'' பதற்றத்தை மறைத்து அப்பாவி போல கோயா கூறினார். ''நீ உள்ளே இறங்கியவுடன் எல்லாரும் கூடி பேசிக்கொண்டிருந்தீர்களே...'' அங்கே நடந்ததை வீடியோ கேமராவில் எரிக்சன் பார்த்து இருக்கிறான் என்பது புரிந்தது. - தொடரும்... நரேஷ் அருண்குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !