உள்ளூர் செய்திகள்

குரலில் கம்பீரம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு இந்து உயர்நிலைப் பள்ளியில், 1995ல், 10ம் வகுப்பு படித்தேன். உயரமானவள் என்பதால், கடைசி பெஞ்சில் அமர்ந்திருப்பேன். எங்கள் வகுப்பு தமிழ் ஆசிரியை கீதா, தனித்துவமாக பாடம் நடத்துவார். கம்பீர குரலில், ஏற்ற இறக்கத்துடன் பேசுவார். அவரது குரல் வனப்பும், வசீகரமும் நிறைந்தது. ஆண்டு விழாவை, அவர் அழகுற தொகுத்து வழங்கியது, அனைவரையும் கவர்ந்தது. அன்று வகுப்பை கவனிக்காமல் அமர்ந்திருந்தேன். அதை கண்டிக்கும் வகையில், ஆசிரியை பெரிய கண்களை விரித்து உருட்டி, அபிநயத்துடன் என்னை அழைத்து தன் காலடியில் அமர வைத்தார். கோபத்தை மிக அரிதாகத்தான் அவரிடம் பார்க்க முடியும். உச்சபட்சமாக, 'ஏ பிள்ளை...' என, கம்பீரமான ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடுவார். அவரைப்போல் பாவனை செய்து பழகினேன். அதே பாணியில் பயிற்சி செய்து, கல்லுாரியில் புகழ் பெற்றேன்.தற்போது என் வயது 45. இல்லத்தரசியாக இருக்கிறேன். ஆசிரியை கீதாவிடம் கற்றதன் அடிப்படையில், குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன். அது அன்றாட வாழ்விலும் பிரச்னைகளை சமாளிக்க உதவுகிறது. ஆசிரியையிடம் பெற்ற பயிற்சியால் என் வாழ்கை நிறைவாக பயணிக்கிறது. அவரை வணங்குகிறேன். - சுவர்ணா சபரிக்குமார், விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !