உள்ளூர் செய்திகள்

குருவி கற்ற பாடம்!

காட்டில் பறந்து திரிந்தது சிட்டு. அதற்கு பள்ளி சென்று, கணக்கு கற்றுக் கொள்ள ஆசை ஏற்பட்டது. காட்டில் பறவைகளும், மரங்களும் எவ்வளவு உள்ளன என்பதை கணக்கெடுக்க விரும்பியது. தாய்க்குருவியிடம் விருப்பத்தை தெரிவித்தது. சிட்டுவின் செயலை வரவேற்று ஒரு திட்டம் வகுத்தது தாய்க்குருவி.திட்டப்படி, 'காட்டுக்கு அருகில் ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது; அங்கு ஒன்றாம் வகுப்பில் ஜன்னல் கம்பியில் அமர்ந்து, கணக்கு வகுப்பைக் கவனி...' என்று கூறி அனுப்பியது.மறுநாள் அதிகாலை எழுந்து குளித்து தயாரானது சிட்டு. தாய் தந்த தானியங்களை கொத்தி தின்றது. பின், உற்சாகத்துடன் பள்ளி நோக்கிப் பறந்தது.ஒன்றாம் வகுப்பு ஜன்னல் கம்பியில் அமர்ந்தது சிட்டு. வகுப்பில் சிறுவர், சிறுமியர் வரிசையாய் அமர்ந்து படிப்பதை கவனித்தது.அன்று, கணக்கு பாடம் தான் முதல் வகுப்பில் நடந்தது.பல வண்ண பந்துகளை மேஜையில் அடுக்கி உற்சாகம் பொங்க கற்பித்தார் ஆசிரியை. அதை கூர்ந்து கவனித்தது சிட்டு. வாய் விட்டு பாடங்களை சொல்லிப் பழகியது.தொடர்ந்து எண்களை சொல்லிக் கொடுத்தார் ஆசிரியை. அதையும் கூர்மையாக அவதானித்தது.கற்ற பாடத்துடன், மாலையில் காட்டை நோக்கி பறந்தது சிட்டு.'செல்லம்... இன்று என்ன கற்றாய்...'கேட்டது தாய்க்குருவி.'ஒன்று என்ற எண்ணை கற்றேன் அம்மா...'புத்துணர்வுடன் கூறியது சிட்டு.மறுநாள் மீண்டும் வகுப்பில் அமர்ந்தது சிட்டு. 'ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று; இரண்டு, முகத்தின் கண் இரண்டு; மூன்று முக்காலிக்கு கால் மூன்று...' இவ்வாறு, 10 வரை எண்களை விளக்கி பாடினர் சிறுவர், சிறுமியர். கடுமையாக முயன்று இரண்டு, மூன்று, நான்கு... என எண்களை மனப்பாடம் செய்து பழகியது சிட்டு.ஒரு வாரம் கடந்தது -காட்டில் மரங்களை எண்ணும் ஆசையில், 'ஒன்று...' என்றது சிட்டு; பின், அடுத்த எண்ணை மறந்துவிட்டது.இதை கவனித்த தாய்க்குருவி, 'அதோ... மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கைகளை எண்ணு பார்ப்போம்...' என ஆசையாய் கேட்டது.'ஒன்று... அப்புறம் ஒன்று... அதுக்கு பக்கத்தில் ஒன்று... அதற்கும் அடுத்து ஒன்று...'தடுமாறியது சிட்டு.அன்றிரவு -'நம் சிட்டு, பள்ளி செல்வது போல் தெரிகிறதே...'ஆசையாய் தாய்க்குருவியிடம் கேட்டது தந்தைக்குருவி.'ஆமாம்... போகுது; ஆனால் தலையில் எதுவும் ஏற மாட்டேங்குது...'அலுத்து கொண்டது தாய்க்குருவி.அந்த நேரத்தில் -'அப்பா-... நான் ஆசிரியை சொல்லி தந்ததை கற்றேன்...'மகிழ்ச்சியுடன் வந்தது சிட்டு.'செல்லம்... என்ன கற்றாய்...''ஒன்று தான் அப்பா...'உற்சாகத்துடன் கூறியது சிட்டு.இறகால் தலையில் அடித்து கொண்டது தாய்க்குருவி.'படிப்பு வரவில்லை என்றாயே; அது எப்படி, ஒன்று மட்டும் கற்றதாம் சிட்டு...'நம்பிக்கையுடன் சிரித்தது தந்தைக்குருவி.பட்டூஸ்... முயற்சி செய்தால் பாடங்கள் கண்டிப்பாக மூளையில் பதியும்.- வ.விஜயலட்சுமி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !