முதல் மேடை பேச்சு!
திருவண்ணாமலை, வி.டி.எஸ்., ஜெயின் பள்ளியில், 1997ல், 10ம் வகுப்பு படித்தேன். பள்ளியில் நடந்த போட்டியில், அப்துல் கலாம் குறித்து ஒரு கவிதை எழுதி இருந்தேன். அதை பார்த்த என் தமிழாசிரியர் ஜோதி பிரகாசம், மிகவும் பாராட்டினார். சிறுவயதில் இருந்து கவிதை, கதை எழுதும் ஆர்வத்தை, அப்பா ஏற்படுத்தி இருந்தார். இதற்கு முன்பும் கட்டுரை, கவிதை போட்டிகளில் பல பரிசுகளை வென்றதை ஆசிரியரிடம் தெரிவித்தேன். என் குரலும், தமிழ் உச்சரிப்பும் சிறப்பாக இருப்பதாக பாராட்டிய தமிழாசிரியர் ஜோதி பிரகாசம், பள்ளியில் நடக்க இருந்த பேச்சு போட்டியிலும் பங்கேற்க வலியுறுத்தினார். மேடையேறி பேசுவதில் எனக்கு பயம். இதை அவரிடம் தெரிவித்தேன். 'நீ எழுதிய கவிதையை, நீயே உணர்ச்சி பூர்வமாக, ஏற்ற இறக்கத்துடன் படித்தால், கவிதை உயிரோட்டமுடன் இருக்கும். அதனால் இந்த கவிதையை, பள்ளி ஆண்டு விழாவில் வாசிக்க வேண்டும்' என்று கூறி, தினமும் பயிற்சி அளித்து, என் பயத்தையும் போக்கினார். ஆண்டு விழாவில் மிகச் சிறப்பாக கவிதை வாசித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றேன். தற்போது என் வயது, 44. கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறேன். பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறேன். முதல் முறையாக என்னை மேடையேற்றி பேச வைத்த தமிழாசிரியர் ஜோதி பிரகாசத்தை மனதார வணங்கி வருகிறேன். அவர் வழியில் நானும் என் மாணவர்களின் திறமையை ஊக்குவித்து வருகிறேன். -எஸ்.உமாதேவி பலராமன், திருவண்ணாமலை. தொடர்புக்கு: 94863 65350.