நல்லறிவு!
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், புளியங்குடி வள்ளலார் பாடசாலை, 1953ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அங்கு, 6ம் வகுப்பில் சேர்ந்தேன். பள்ளி பொறுப்பாளர் கே.சுந்தரராஜன் தலைமையாசிரியராகவும் இருந்தார். எல்லா பாடங்களையும் அவரே நடத்துவார். பொது அறிவை வளர்க்கும் விதமாக சிறப்பு தகவல்கள் தருவார். நம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேறும் வகையில், 'அன்புடன் பழக வேண்டும்; அறிவாக படிக்க வேண்டும்; நற்பண்பையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்து பணிவுடன் நடக்க வேண்டும்...' என, அடிக்கடி அறிவுரை கூறுவார். திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றிய பாடல்களை எடுத்துக்கூறி கருத்துகளை பின்பற்ற வலியுறுத்துவார். அதன்படி முயன்று முன்னேறினேன். தொடர்ந்து சிதம்பரம் பச்சையப்பன் பள்ளியில், 10ம் வகுப்பு சேர்ந்தேன். வறுமை சூழலால் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. அனைவரையும் கவரும் வகையில் பாடும் திறன் பெற்றிருந்ததால், பயிற்சி செய்து அதை மெருகேற்றினேன். இப்போது என் வயது, 83. வள்ளலார் வழியை பின்பற்றி, சமூக தொண்டு செய்து வருகிறேன். இன்னிசை அகவல் பாராயண நிகழ்ச்சிகள் நடத்துகிறேன். இந்த பணிக்காக, அருட்பா தென்றல் என்ற பட்டம் பெற்றுள்ளேன். இதுபோன்று சேவைகள் செய்ய அடித்தளம் அமைத்த தலைமையாசிரியர் கே.சுந்தரராஜனை போற்றி வாழ்கிறேன். - சிவ.நாகராஜன், சிதம்பரம்.