உள்ளூர் செய்திகள்

பிரம்பு எதற்கு?

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை அரசு உயர்நிலைப் பள்ளியில், 1992ல், 10ம் வகுப்பு படித்தேன்.அன்று மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடந்ததால் மரத்தடியில் அமைந்த வகுப்புக்கு மாறியிருந்தோம். திறந்தவெளிக்கு வந்ததால், எல்லாரும் குஷியானோம். திருக்குறள் அலகிடுதல் பாடம் நடத்தி கொண்டிருந்தார் தமிழாசிரியர் ராமையா. சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பாடத்தை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்தோம்.மிகவும் கோபம் கொண்ட ஆசிரியர், தண்டனை தர பிரம்பை எடுத்து வர கூறினார். அதற்காக வகுப்பறைக்கு சென்றான் ஒருவன். பின், 'படிக்கும் நேரத்தில் கவனச்சிதறல் கூடாது...' என்று அறிவுரைத்தார். அப்போது, காற்று பலமாக வீசியது. மரத்தில் காய்ந்திருந்த சிறு கிளை முறிந்து விழுந்தது.உடனே, 'உங்களை தண்டிப்பதற்கு குச்சியை தந்து விட்டது மரம். அதற்கே உங்கள் செயல் பிடிக்கவில்லை...' என்று கூறினார்.இதை கேட்டதும் மனம் விட்டு சிரித்தோம். அந்த நேரத்தில் பிரம்பு எடுத்து வந்தவனைக் கண்டதும் நடுங்கினோம். அதை வாங்கியபடி, 'அடிப்பதற்காக நான் வரவில்லை; கற்று தர வந்திருக்கிறேன்...' என பயத்தை போக்கி தெளிய வைத்து, 'உரிய முறையில் பாடத்தில் கவனம் செலுத்தினால் தான், கல்வியில் வளர்ச்சியடைய முடியும்...' என மென்மையாக அறிவுரைத்தார்.எனக்கு, 50 வயதாகிறது. சென்னை, சத்யபாமா நிகர்நிலை பல்கலையில் நுாலகராக பணிபுரிகிறேன். பள்ளியில் நடந்த சம்பவம் மனம் முழுக்க நிரம்பியுள்ளது. மரங்களை பார்க்கும் போதெல்லாம், அந்த தமிழாசிரியரின் இனிய அறிவுரை நினைவில் வந்து மகிழ்வு தருகிறது.- க.ராமசாமி, தென்காசி.தொடர்புக்கு: 99529 92515


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !