உள்ளூர் செய்திகள்

சலிப்பற்ற வாசிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், ஏரவாஞ்சேரி அடுத்துள்ள விஷ்ணுபுரம் ஜார்ஜ் உயர்நிலை பள்ளி 108 ஆண்டு பழமையானது. இங்கு, 1954ல், 6ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் சி.வி.நடராஜன். தமிழ் பாடமும் நடத்துவார். செய்யுள்களை பொருள் புரியும்படி பொறுமையுடன் விளக்குவார். சிறுகதைகள் சொல்லி கலகலப்பூட்டுவார். அப்போதைய சிறுவர் இதழ்களான கண்ணன், அம்புலி மாமா போன்றவற்றை படிக்கச் சொல்வர். படித்ததில் ரசித்ததை கேட்டு உற்சாகம் ஊட்டுவார். பள்ளி அளவிலான பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்து, தக்க பயிற்சிகள் தருவார். போட்டிக்கு தயாராகும் போது, 'பரிசு கிடைக்கவில்லை என்றாலும் வருத்தப்படகூடாது... தொடர்ந்து முயன்று முன்னேற வேண்டும்....' என நம்பிக்கையூட்டுவார். படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை வகுப்பில் சுவாரசியமாக கூறுவார். அன்றாடம் செய்தித்தாள், இதழ்கள் படிக்கும் ஆர்வத்தை துாண்டினார். அது சலிப்பற்ற வாசிப்புக்கு துாண்டுகோலானது. என் வயது 84; இல்லத்தரசியாக இருக்கிறேன். நாளிதழ், வார, மாத இதழ்களை தவறாமல் படித்து வருகிறேன். அவை நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்கிறேன். நான் எழுதிய கதை, கட்டுரை, கவிதைகள் பிரசுரமாகி பரிசுகள் கிடைத்துள்ளன. இத்தனையும் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் சி.வி.நடராஜன் விதைத்தில் இருந்து உருவானதுதான். மாணவர்களின் அறிவை விருட்சமாக வளர்ந்தவரின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறேன். - பிச்சை சுவாமிநாதன், சென்னை. தொடர்புக்கு: 79046 08981


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !