உள்ளூர் செய்திகள்

நேர்மை!

நிறுவன தலைவருக்கு வயது முதிர்வால் தளர்ச்சி ஏற்பட்டது. தன் பொறுப்பை தகுதியானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக ஊழியர்களை அழைத்தார்.ஆர்வமுடன் வந்திருந்தோரிடம், ''நிறுவன நிர்வாக பொறுப்புக்கு ஒருவரை தேர்வு செய்ய போட்டி ஒன்றை நடத்துகிறேன்; இதில் வெற்றி பெறுபவரே அடுத்த நிர்வாகியாக பொறுப்பு வகிப்பார்...'' என்றார்.அனைவரும் அவரை கவனித்து அமைதியாக நின்றனர்.''என் கையில், சில விதைகள் இருக்கின்றன. ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்... வீட்டில் தொட்டியில் நட்டு, உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்றாக வளர்த்து, அடுத்த ஆண்டு இதே நாளில் எடுத்து வர வேண்டும். யாருடைய செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ, அவரே இந்த பொறுப்புக்கு தகுதியானவராக முடிவு செய்வேன்...'' என்றார் தலைவர்.வியப்புடன் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர். நிறுவனத்தில் வேலை செய்யும் ராமகிருஷ்ணனுக்கும் ஒரு விதை கிடைத்தது. ஆர்வத்துடன் பெற்று சென்றார். வீட்டில் அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தார் அவரது மனைவி.ஒரு வாரத்திற்கு பின் -தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டதாக பேசிக் கொண்டனர் ஊழியர்கள்.ராமகிருஷ்ணன் தொட்டியில் செடி முளைக்கவேயில்லை.ஒரு மாதம் கடந்தது. அதன் பின்னும் முளைக்கவில்லை. நாட்கள் உருண்டோடின. அப்போதும் தொட்டியில் செடியை காணமுடியவில்லை.'விதையை வீணாக்கி விட்டேனா'நடுக்கத்துடன் காத்திருந்தார் ராமகிருஷ்ணன்.ஆனால், விதை ஊன்றிய தொட்டியில் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவே இல்லை. தொட்டியில் ஊன்றிய விதை முளைக்கவில்லை என யாரிடமும் அவர் கூறவும் இல்லை.ஒரு ஆண்டிற்கு பின் -தொட்டிகளை நிறுவனத்துக்கு எடுத்து வந்தனர் ஊழியர்கள்.''காலி தொட்டியை எடுத்துப் போக மாட்டேன்; எனக்கு வெட்கமாக இருக்கிறது...'' மனைவியிடம் மறுப்பு தெரிவித்தார் ராமகிருஷ்ணன்.''செடி வளராததற்கு வருந்தாதீர். அதற்கு நீங்கள் காரணம் அல்ல... தொட்டியை இருப்பது போல் எடுத்து சென்று காட்டுங்கள்...''கணவரை சமாதானப்படுத்தினார் மனைவி.அதன்படி எடுத்து வந்தார் ராமகிருஷ்ணன்.அனைத்து ஊழியர்களின் தொட்டிகளிலும் விதவிதமாக செடிகள் வளர்ந்திருந்தன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. பலவித வண்ணங்களில் பூத்து குலுங்கின.ராமகிருஷ்ணனை அனைவரும் ஏளனமாக பார்த்தபடி நின்றனர். ஒவ்வொன்றாக பார்வையிட்டார் நிறுவன தலைவர்.''அருமை... எல்லாரும் செம்மையாக வளர்த்து உள்ளீர்...''பாராட்டிய படி, கடைசி வரிசையில் நின்றிருந்த ராமகிருஷ்ணனை அருகே அழைத்தார் தலைவர்.பயந்தபடி சென்றவரிடம், ''உங்கள் செடி எங்கே...'' என்று கேட்டார்.விபரத்தை எடுத்துரைத்தார் ராமகிருஷ்ணன்.''இந்த கம்பெனி நிர்வாகத்தை ஏற்று நடத்த தகுதியானவர் நீங்கள் தான்...''ராமகிருஷ்ணனை நட்புடன் அணைத்தபடி அறிவிப்பை வெளியிட்டார் தலைவர்.அதிர்ச்சியில் உறைந்து குழம்பி நின்றனர் ஊழியர்கள்.குழப்பத்தை போக்கும் விதமாக, ''சென்ற ஆண்டு நான் உங்களிடம் தந்த விதைகள் அனைத்தும் வெந்நீரில் அவிக்கப்பட்டவை. முளைக்க வாய்ப்பேயில்லை. கொடுத்தது முளைக்காததால் எல்லாரும் வேறு விதையை ஊன்றி வளர்த்து இருக்கிறீர். ராமகிருஷ்ணன் மட்டுமே நேர்மையாக நடந்துள்ளார். அவரே நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர்...'' என்றார் தலைவர்.அமைதியுடன், 'உரைக்கும் சொல், பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் வெற்றிகள் தேடி வரும்' என எண்ணியபடியே புதிய பொறுப்பை ஏற்றார் ராமகிருஷ்ணன். பட்டூஸ்... உண்மையும், நேர்மையும் வாழ்வில் உயர உதவும்!- எம்.அசோக்ராஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !