உள்ளூர் செய்திகள்

வரம்!

காட்டில் விறகு வெட்டி விற்று பிழைத்து வந்தான் வீரையா. அங்கு தவம் செய்த முனிவருக்கு வேண்டிய பணிவிடைகளையும் தவறாது செய்து வந்தான். இதனால், மனம் மகிழ்ந்த முனிவர் அவனை அழைத்து, 'எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எனக்கு சேவை செய்து வருகிறாய். உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். வேண்டியதை கேள்...' என்றார். 'என்ன வேண்டுமானலும் தருவீங்களா சாமி...' 'ம்... கேள்... தருகிறேன்...' மனதில் ஆசை பேயாய் ஆட, பலமாக யோசித்தபடி, 'உலகத்தில் உள்ள எல்லா சுகபோகத்தையும் நான் மட்டுமே அனுபவிக்கணும்...' என்றான் வீரையா. 'நல்லா யோசிச்சு தான் கேட்கிறாயா...' 'ஆமாம் சாமி... மறு சிந்தனைக்கு இடமே இல்லை...' தீர்க்கமாக சொன்னான் வீரையா. அருகில் அழைத்து காதில் ஒரு மந்திரம் கூறி, 'இதை இரவு படுக்கைக்கு போகும் முன் பாராயணம் செய். காலை நீ எதை நினைக்கிறாயோ அது நடக்கும்...' என சொல்லி சட்டென காட்டுக்குள் மறைந்தார் முனிவர். கற்றுத்தந்த மந்திரத்தை சொல்லிய பின் படுத்த வீரையா, காலையில் கண் விழித்தான். குடிசையாக இருந்த வீடு மாளிகையாக வேண்டும் என்பது போல் பலவற்றையும் எண்ணினான். வீரையா கேட்ட செல்வங்கள் அனைத்தும் குவிந்தன. மகிழ்ச்சியில் திக்கு முக்காடியபடி மனைவி, குழந்தைகளை அழைத்தான். யாரும் வரவில்லை. தேடிப்பார்த்தான். எங்கும் காணவில்லை. ஊர் அமைதியாக இருந்தது. தெருவில் யாருடைய நடமாட்டமும் இல்லை. ஊரே காலியானது போலிருந்தது. ஒரு மனிதரை கூட காணவில்லை. ஊர் முழுவதும் சுற்றி வந்தான். மயான அமைதி. கவலை வாட்ட காட்டிற்கு ஓடினான் வீரையா. முனிவரை தேடினான். அவரை காணவில்லை. கதறி அழுதான் வீரையா. 'உலகில் தனியாக இருந்து என்ன செய்யப் போகிறேன்' எண்ணியபடி அருகிலிருந்த பாம்பு புற்றுக்குள் கையை விட்டான். சட்டென்று புற்று மறைந்தது. முனிவர் வெளிப்பட்டார். 'நீ நினைத்ததெல்லாம் நடந்ததா...' 'மன்னிச்சுடுங்க ஐயா... நான் மட்டுமே இந்த உலகத்திலே சுகபோகத்தை அனுபவிக்க கேட்ட வரம் தப்பு தான்... எனக்கு வரமே வேண்டாம்... என் மனைவி, குழந்தைகளுடன் அந்த பழைய வாழ்க்கையை திருப்பி கொடுத்துடுங்க... முன்போலவே உழைத்து முன்னேறுகிறேன். அது போதும்...' 'எல்லாம் நிறைந்தது தான் உலகம். வாழ்க்கையில் ஏற்படும் பேராசை என்றுமே துன்பம் தான் தரும். நீ கேட்டபடியே உழைத்து சுகமாய் வாழ்வாய்...' வரங்கொடுத்த முனிவர் மறைந்தார். மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான் வீரையா. பட்டூஸ்... கிடைக்கும் வாய்ப்புகளை நல்வழியில் பயன்படுத்தி மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும்! டி.ரவீந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !