நரி கற்றுக்கொண்ட பாடம்!
ஒரு காட்டில் வசித்த இரண்டு நரிகள், சக விலங்குகளை பொய் சொல்லி நம்ப வைத்து, ஏமாற்றுவதையே பொழுது போக்காக கொண்டிருந்தன. அன்று, யாரை ஏமாற்றலாம் என்று யோசித்தபடி, நரிகள் இருந்தன. அப்போது, ஒரு காட்டெருமை அந்த பக்கமாக வந்து கொண்டிருந்தது. 'வா, நண்பா... எப்படி இருக்கிறாய்...' நலம் விசாரித்தன நரிகள். அலட்சியமாக கடக்க முயன்ற காட்டெருமையிடம், 'இன்று நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருக்கிறாய்...' என்றது, ஒரு நரி. 'அப்படியா... நிஜமாவா சொல்கிறாய்...' தன்னை புகழ்ந்ததில் காட்டெருமை மயங்கியது. 'சத்தியமா, நீ ரொம்ப அழகா இருக்கிறாய்...' மற்றொரு நரியும் சேர்ந்து கூறியது. இதுவரை தன்னைப் பார்த்து அழகாக இருப்பதாக யாருமே கூறியதில்லை என்பதால், மகிழ்ந்தது காட்டெருமை. 'ரொம்ப, ரொம்ப தேங்க்ஸ்...' அங்கிருந்து உற்சாகத்துடன் புறப்பட்டது காட்டெருமை. எதிரே வந்த குரங்கிடம், தன் அழகை உறுதி செய்து கொள்ள விரும்பியது காட்டெருமை. 'பார்ப்பதற்கு இன்று நான் ரொம்ப அழகா இருக்கேனா...' காட்டெருமையின் மனதை நோகடிக்க குரங்கு விரும்பவில்லை. 'ஆமாம்... எல்லாரும் தான் அழகு... நீ, ரொம்ப அழகு...' என்றது குரங்கு. மகிழ்ச்சியுடன் நடை போட்ட காட்டெருமை, எதிரில் ஒரு யானை வருவதை பார்த்தது. அதனிடமும் தன் அழகை பற்றி விசாரித்தது காட்டெருமை. 'அந்த நரிகள் உண்மை தான் பேசுகின்றன என்பதை, குரங்கும் உறுதி செய்துவிட்டது...' யானையிடம் நரிகளை பற்றி புகழ்ந்து பேசியது காட்டெருமை. பிறரை ஏமாற்றுவதையே பொழுதுபோக்காக கொண்டிருந்த நரிகளுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தது யானை. அதை வெளிப்படுத்தாமல், காட்டெருமைக்கு விருந்து கொடுத்தது. 'எனக்கு இன்று பிறந்தநாள். அந்த நரிகளிடமும் சொல்... அவற்றுக்கும் விருந்தளிக்கிறேன்...' என்றது யானை. மகிழ்ச்சியுடன் திரும்பிய காட்டெருமை, நரிகளை பார்த்ததும் நின்றது. 'எங்கிருந்து வருகிறாய்... நாங்கள் பாராட்டியது குறித்து விசாரித்தாயா...' என்றன, நரிகள். 'ஆமாம்... குரங்கும், யானையும் கூட பாராட்டின. இன்று யானைக்கு பிறந்தநாள்... விருந்து சாப்பிட்டு வருகிறேன்... நீங்களும் சென்று விருந்து சாப்பிடலாம்...' என்றது, காட்டெருமை. காட்டெருமை கூறியதை உண்மை என்று நம்பி, யானையிடம் விருந்து சாப்பிட ஆவலோடு புறப்பட்டன நரிகள். யானையை பார்த்ததும், பிறந்தநாள் விருந்து கேட்டன நரிகள். 'அழகானவர்களுக்கு மட்டும் தான் விருந்து தருவேன்... உங்களுக்கு விருந்து இல்லை...' என்றது யானை. 'ஒருவர் நம்பும் படி கூறி பொய்த்து போனால், அது மிகுந்த ஏமாற்றத்தை தரும்' என்ற பாடத்தை யானையிடம் கற்றுக்கொண்டன நரிகள். காட்டெருமையை ஏமாற்றியதற்காக வெட்கப்பட்டு, திருந்தின. குட்டீஸ்... யாரையும் நம்ப வைத்து ஏமாற்றக்கூடாது. - ஆர்.வி.பதி