வினோத சிலந்திகள்!
சிலந்தி இனம், எட்டுக்கால் பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. எட்டுக்கால்களுடன், உடல் இரு பிரிவுகளாக உள்ள உயிரினம். கணுக்காலி வகையை சேர்ந்தது. உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் உள்ளன. வீட்டுச் சிலந்தி இருளான பகுதிகளில் வசிக்கும். வீட்டுக் கூரை, ஜன்னல் பக்கம் வலை பின்னும். இரையாகும் பூச்சிகளை எளிதில் பிடிக்க முடியும் என்பதால், இந்த இடங்களை தேர்ந்தெடுக்கும். வலை பின்னியதும், பூச்சி வரவுகாக ஓரமாக காத்திருக்கும். பெரிய பூச்சி சிக்கினால், வலை நுாலால் சுற்றி, இறுக்கி உணவாக்கி விடும். உலகில் வினோத சிலந்திகள் உள்ளன. அவை குறித்து பார்ப்போம்...பிளாக்விடோ: கறுப்புக் கண்ணாடி போல் உடல் இருக்கும். ஆண், பெண்ணில் வித்தியாசங்கள் உண்டு. பெண் சிலந்தி சற்றுப் பெரிதாக இருக்கும். வயிற்றுப் பகுதியில் சிவப்பு வட்டம் காணப்படும். ஆண் சிலந்திக்கு உடலின் இருபுறமும் சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகள் காணப்படும். பொதுவாக தனிமை விரும்பியாக இருக்கும். வலையில், சின்ன அதிர்வு ஏற்பட்டாலும், ஓரமாக பதுங்கி கொள்ளும். இந்த வகையில் பெண் சிலந்தி தான் கடிக்கும். அதன் கடி வித்தியாசமானது. ஆரோக்கியம் நிறைந்தோரை இது பாதிக்காது. தோட்டச் சிலந்தி: தோட்டத்திலும், புல்வெளிகளிலும் வாழும். கறுப்பு, மஞ்சள் கோடுகளுடன் காணப்படும். நடுப் பகுதியில், சற்று அதிக வலிமையாக வலையை பின்னும். அந்த பகுதியில், பெண் சிலந்தி அமர்ந்து கொள்ளும். அதை சுற்றி, வலையை மேலும் விரிவாக்கிக் கொண்டே இருக்கும் ஆண்.தங்கக்கம்பி சிலந்தி: இதைப் பூச்சிலந்தி என்றும் சொல்வர். மஞ்சள் உடலில், சிவப்பு கீற்றுகள் இருக்கும். கண்களுக்கு இடையே, சிவப்பு வண்ணம் காணப்படும். புல்வெளி, வயல், தோட்டங்களில் வெண்மை மற்றும் மஞ்சள் மலர்களின் மீது வாழும். பெரிய மலர்களின் ஓரத்தில் அமர்ந்திருக்கும். பூவில் தேன் குடிக்க வரும் பூச்சிகளை பிடித்து, உடலில் விஷத்தை ஏற்றும். இந்த விஷம், பூச்சியின் உடல் பாகங்களை உருக்கி திரவமாக மாற்றும். அந்த திரவத்தை உறிஞ்சிக் குடித்து உயிர் வாழும்.பச்சை சிலந்தி: வயல், காடுகளில் காணப்படும். புதர்களிலும், சிறு செடிகளிலும் கூட இருக்கும். வேகமாக ஓடும் திறன் பெற்றது. பூனையைப் போல், பதுங்கி பூச்சியைப் பிடித்து உண்ணும்.கரோலினா உல்ப்: வயல்களில் காணப்படும். தரையில் கிடக்கும் பூச்சிகளை இரவில் வேட்டையாடும்.பாலைவன சிலந்தி: அளவில் மிகப் பெரியது. மணலுக்கடியில் புதை குழி அமைத்து வாழும். இரவில் குழியின் வாசலருகே பூச்சிக்காக காத்திருக்கும். மற்ற நேரங்களில் வெளியே வராது. ஆண், -11 ஆண்டுகள், பெண், 25 ஆண்டுகள் வரை வாழும். விடா முயற்சியை சிலந்தியிடம் கற்றுக் கொள்ளலாம்.- எஸ்.ராமதாஸ்