தொட்டில் பழக்கம்!
கோவை மாவட்டம், சிறுமுகை அரசு உயர்நிலைப்பள்ளியில், 1971ல், 10ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார் மாரண்ணன். சரித்திர, பூகோள பாடங்கள் கற்பிப்பார். உலக நாடுகள் பற்றிய தகவல்களை தந்து, பொது அறிவை வளர்க்க வலியுறுத்துவார். வாரம் ஒருமுறை நுாலகம் அழைத்து செல்வார். அங்கு புத்தகம், பருவ இதழ்களை வாசிக்க வற்புறுத்துவார். அதை ஏற்று இதழ்களை படிப்பதில் ஆர்வம் காட்டினேன். ஒருநாள் வகுப்பில், 'ரஷ்யாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் யார்...' என கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. என் முறை வந்தபோது, 'லியோ டால்ஸ்டாய்...' என்று கூறினேன். மிகவும் மகிழ்ந்து பாராட்டியவரிடம், 'உங்கள் அறிவுரையை ஏற்று செயலில் கடைபிடித்ததால் தான் இது சாத்தியமானது...' என, பணிவுடன் கூறி அமர்ந்தேன். எனக்கு, 68 வயதாகிறது. அச்சக தொழில் செய்து வருகிறேன். பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மாரண்ணன் காட்டிய வழியில் தொடர்ந்து பயணித்து புத்தகங்கள் வாசித்து, பொது அறிவை வளர்த்து வருகிறேன். அது, நான் செய்து வரும் தொழிலுக்கு உதவியாக உள்ளது. - தி.வெ.தனபால், கோவை. தொடர்புக்கு: 94422 52120