தொட்டிலும், குழந்தையும்!
அமெரிக்க பழங்குடியின் இனத்தவர்களில் ஒரு பிரிவினரை மஸ்கோகி என அழைப்பர். இந்த இனத்தில் குழந்தைகளை தொட்டில் போன்ற கூடையில் இட்டு மரக்கிளைகளில் தொங்க விடுவர் அன்னையர். பின், அன்றாட பணிகளில் ஈடுபடுவர். துாய காற்றை சுவாசித்தபடி குழந்தைகள் துாங்கும். காட்டு விலங்கு தொல்லை இருக்காது. இலை அடர்த்தியால் சூரிய ஒளி சுள்ளென குழந்தை முகத்தில் பட்டு சிரமம் தராது. விழிக்கும் போது பறவைகளின் இனிய குரலை கேட்கும் குழந்தைகள், பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை கண்டு சிரிக்கும். இப்படி இயற்கையை ரசிக்கும் குழந்தைகளை தொட்டிலில் இடும் போது, 'இந்த கிளையும் ஒருநாள் முறியும்... தொட்டிலும் தட்டென விழும்...' என தாலாட்டுவர் அன்னையர். அந்த பாடலின் பொருள்... ' குழந்தை வளரும் போது தொட்டிலில் பாரம் அதிகமாகும். அந்த கனம் தாங்காமல் கிளை முறியும். தொட்டில் தரையில் விழுவதை தவிர்க்க முடியாது. எனவே குழந்தையே நீ வளர்ந்துவிட்டாய்... எழுந்து இந்த பூமியில் நடமாடு... வருவதை எதிர்கொள்... தாயின் அரவணைப்பு இனி உனக்கு தேவையில்லை...' என்பதாக தாலாட்டு நீள்கிறது. தமிழ் மொழியில், தொட்டிலுக்கு துாளி, ஏணை என்ற பெயர்கள் உண்டு. ஏண் என்பது உயரத்தை குறிக்கும். இதிலிருந்து தான், ஏணி என்ற சொல் உருவானது. இது, காட்சி பூர்வமாக அமெரிக்க பழங்குடியின மக்கள் பாடும் தாலாட்டின் பொருளை உணர்த்துகிறது. - மோகன்