வெள்ளைப் பூண்டு!
வெள்ளைப் பூண்டு, வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். சித்த மருத்துவத்தில், 'லசுனம்' என அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியா பகுதியை தாயகமாக உடையது. பின், உலகெங்கும் பரவியது. உற்பத்தியில் அண்டை நாடான சீனா உலக அளவில் முதலிடத்திலும், நம் நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன.பூண்டில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மலைப்பூண்டும், நாட்டுப் பூண்டும் உணவில் சிறப்பிடம் பெறுகின்றன.மலைப்பூண்டின் பல், பெரிதாக இருக்கும்; நாட்டுப்பூண்டின் பல், சிறிதாக இருக்கும்.உணவில் சேர்த்துக் கொள்வதால், உணவுக்கூழ் வயிற்றில் எளிதாக கரையும். வயிற்றுப் பொருமல் நீங்கும். நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாவதுடன், நோய்த் தொற்றையும் எதிர்க்கும் ஆற்றலை தருகிறது.இதய தொடர்பான நோய்களை தடுக்கும் மிகச்சிறந்த மருந்து, வெள்ளைப் பூண்டு. ரத்தத்தில் வெள்ளை அணு செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. உடலில் சேரும் ஊளை சதையை கரைக்கிறது. தண்டுவட செயல்பாட்டுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது; நீரிழிவை குணப்படுத்துகிறது. மாதவிடாய் கோளாறுக்கும் மருந்தாகிறது. வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து பகுதியில் உள்ள பிரமிடுகளில், இறந்த உடல்களை பதப்படுத்த பூண்டு முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங்காலத்தில் கடவுளுக்கு செலுத்தும் காணிக்கைப் பட்டியலில் பூண்டுக்கு முதன்மை இடம் தந்துள்ளனர் எகிப்தியர்.தமிழகத்தில் வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டி தொங்க விடுவது வழக்கம். அதுபோல, பண்டைய கிரேக்கத்தில் பூண்டு தொங்கவிடும் வழக்கம் இருந்துள்ளது.முதல் உலகப்போரில் வீரர்கள் காயத்தை குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின், கபா துறைமுகத்தில் இருந்து, மெசினா துறைமுகம் வந்தடைந்த கப்பலில் ஏற்றியிருந்த சரக்கில், பிளேக் நோய் தொற்று இருந்தது. இது பரவியதால் ஏராளமானோரை காவு வாங்கியது. இச்சம்பவம், 'பிளாக் டெத்' என வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது. பேரழிவை ஏற்படுத்திய பிளேக் நோயில் இருந்து தப்பிக்க மாமருந்தாக மக்களுக்கு பயன்பட்டது பூண்டு.- நர்மதா விஜயன்