நாணயம்!
மூலனுார் அரசு பள்ளியில் ஆண்டு விழா நடக்க இருந்தது.அதற்காக அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருந்தன. தோரணங்களும், பந்துகளும் குறுக்கும், நெடுக்குமாக கட்டப்பட்டிருந்தன. நான்கு வண்ணப் பந்துகள், உத்தரத்தில் தாழ்வாக தொங்கின.பணிகள் நடந்தபோது வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. மின்னல் வெட்டியது; இடியும் முழங்கியது. கடுமையாக பெய்த மழை அடங்கியதும், ஒலிபெருக்கியில், 'மாணவர்களே... பள்ளி வளாகத்தில், அலங்காரம் செய்ய வண்ண பந்துகள் வைத்திருந்தோம்; அவற்றை காணவில்லை. யாராவது எடுத்திருந்தால் தனியாக சந்தித்து தகவல் கூறவும். அது பற்றி, யாரிடமும் சொல்ல மாட்டேன்...' என்றார் தலைமையாசிரியர்.'களவாடியது யாராக இருக்கும்...'பள்ளி முழுதும் சலசலப்பு எழுந்தது. அன்று வீடு திரும்பியதும், 'அம்மா... தவறு செய்துட்டேன். பள்ளியில், அலங்கரிக்க வைத்த பந்துகளை எடுத்து விட்டேன்...' என்றான் பாலா.'என்னடா சொல்ற...''பந்துகள் பார்க்க அழகாக இருந்தன; வீட்டில் வைத்து விளையாடலாம் என எடுத்து வந்து விட்டேன்...''அவற்றை கொடுத்து விடலாம்; நமக்கு சொந்தமில்லாத பொருளை எடுக்க கூடாது. இது உனக்கு முதலும், கடைசியுமாக இருக்கட்டும். வாழ்நாளில் இனிமேல் இது போல் தவறு செய்யாதே...''சரிம்மா... இனி செய்ய மாட்டேன்... ஆசையால் அசிங்கப்பட்டுவிட்டேன்...''பந்துகள் எங்கே...'பையிலிருந்து எடுத்து காண்பித்தான் பாலா.மறுநாள் -அம்மாவுடன் பள்ளிக்கு புறப்பட்டான் பாலா. முதல் வேலையாக தலைமையாசிரியரை சந்தித்து, 'மன்னியுங்கள். நான் தான், அந்த பந்துகளை எடுத்தேன்...' என்றான். அறைக்கு வெளியில் நின்ற அம்மா, 'ஐயா... நான் உள்ளே வரலாமா...' என பணிவுடன் கேட்டார்.'வாங்கம்மா...' 'என் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன். அவன் எடுத்து வந்த பந்தை திருப்பி கொடுக்கிறேன். இனிமேல், இது போன்று தவறு ஏற்படாமல் பார்த்து கொள்கிறேன்...' என்றார்.அந்த செயலை பாராட்டினார் தலைமையாசிரியர். பாலா தக்க பாடம் கற்றுக்கொண்டான்.பட்டூஸ்... பிறர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது!சீ.அருண்குமார்