உள்ளூர் செய்திகள்

நேர்மை வாழ்க்கை!

திண்டிவனம், சிங்கனுார் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், 1995ல், 5ம் வகுப்பு படித்தபோது தலைமை ஆசிரியராக இருந்தார் அ.நாராயணசாமி.அன்று, காலாண்டுத் தேர்வு மதிப்பெண் பட்டியலை பெற்றோரிடம் காட்டி, கையொப்பம் வாங்கி வந்திருந்தோம். அவற்றை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.அப்போது, சக மாணவன் மோகன்தாஸ் காந்தியின் தந்தை அங்கு வந்தார். மகனின் மதிப்பெண் பட்டியலை சுட்டிக்காட்டி, 'பாடவாரியாக கூட்டினால், மொத்த மதிப்பெண்ணில் வித்தியாசம் வருகிறது. சரி பாருங்கள்...' என வேண்டுகோள் வைத்தார்.அதை ஆராய்ந்து கணக்கில், 37 என்றிருந்தது, 87 என திருத்தம் செய்யப்பட்டு இருந்ததை கண்டறிந்து விபரத்தை கூறினார் ஆசிரியர். உடனே, 'ஐயா... ஊராட்சி ஒன்றிய கணக்காளராக பணிபுரிகிறேன். என் மகன் நடத்தையில், குறை கண்டதால், நேரில் வந்தேன். அவனுக்கு, ஒழுக்கப் பாடம் கற்பிக்க நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குறுக்கே நிற்க மாட்டேன்...' என கூறி விடை பெற்றார்.தவறு செய்தவனை முட்டி போட வைத்து, பிரம்பால் விளாசியபடி, 'நேர்மையாக உழைத்து, முன்னேற முயல வேண்டும். குறுக்கு வழியில் போனால், சங்கடங்கள் தான் ஏற்படும்...' என அறிவுரைத்தார் ஆசிரியர். அதை பின்பற்றி வாழ்வில் உயர்ந்தோம்.என் வயது, 37; பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன்; பள்ளியில், சிக்கலில் மாட்டிய நண்பர், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றுகிறார். அவரை சந்திக்கும் போதெல்லாம், அறியாப் பருவத்தில் நடந்த நிகழ்வை பகிர்ந்து, குதுாகலம் கொள்கிறோம்.- ரா.ராஜ்மோகன், விழுப்புரம்.தொடர்புக்கு: 85249 06220


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !