உள்ளூர் செய்திகள்

மொழியும், மதிப்பும்!

சென்னை, ஜார்ஜ்டவுன், செயின்ட் மேரீஸ் பள்ளியில், 1970ல், 3ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... பள்ளியில் ஆங்கில வழியில் தான் பாடங்கள் கற்றுத் தருவர். என் தந்தை சு.க.ராஜரத்தினம், தமிழ் மொழியை கவரும் வகையில் உச்சரிப்பார். அதுபோல் என்னையும் பழக்க விரும்பினார். எனவே, வண்ணாரபேட்டை, சிங்காரத்தோட்டத்தில் தனிப்பயிற்சி மையத்துக்கு அனுப்பினார். அது, சிறு வாசகசாலை போல் இருக்கும். பச்சை வண்ண அரைக்கால்சட்டை மட்டும் அணிந்து வெற்றுடம்புடன் காணப்படுவார், தனிப்பயிற்சி ஆசிரியர் சண்முகம். ஒரு கால் ஊனத்தால் சற்று சிரமத்துடன் நடப்பார். கையில் பிரம்பை பிடித்திருப்பார். காலை 6:00 மணிக்கு துவங்கும் வகுப்பில், அரைத்துாக்கத்தில் பயந்தபடி அமர்ந்திருப்போம். தமிழ் சொற்களை தெளிவாக உச்சரித்து கற்பிப்பார் ஆசிரியர். அதை பின்பற்றி உரக்க சொல்லி, வடிவம் மாறாமல் எழுதுவோம். உன்னிப்பாக கவனித்து பிழையை திருத்துவார். திரும்பவும் தவறினால் பிரம்படி நிச்சயம். இதற்கு பயந்தே கவனமுடன் எழுதி பழகினேன். முதலில் கசப்பாக தெரிந்த வகுப்பு, ஆசிரியரின் அக்கறையால் இனிமையானது. தமிழ் மொழியை வடிவாக எழுதவும், முறையாக பேசவும் கற்பித்த பாணி, பசுமரத்து ஆணியாக மனதில் பதிந்தது. ஆங்கில மொழி பயன்பாட்டிலும் உதவிவருகிறது. எனக்கு, 63 வயதாகிறது. ஐக்கிய நாடுகள் சபை அரசியல் அலுவல் பிரிவில், முதுநிலை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளேன். சர்வதேச அளவில் பிரபல பல்கலைக் கழகங்களில் உரைகள் நிகழ்த்தியுள்ளேன். தமிழ் 'டிவி' பேட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். இந்த உயர்வுகள் எல்லாம், தனிப்பயிற்சி ஆசிரியர் சண்முகம் தந்த மொழி பயிற்சியால் கிடைத்ததாக நம்புகிறேன். பிரம்பை பிடித்தபடி சலிப்பின்றி கற்றுத்தந்த ஆசிரியர் சண்முகத்தின் கனிவான குரல், என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. - ரா.கண்ணன், சென்னை. அலைபேசி: 97910 80008


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !