உள்ளூர் செய்திகள்

சோ சுவீட் சவ்... சவ்!

'சவ்... சவ்' எத்தனை பேருக்கு, இந்த காய் ரொம்ப பிடிக்கும்... என்ன குட்டீஸ், சத்தத்தையே காணோம். பொட்டேட்டோ பிடிக்குமா... இது மட்டும் எல்லாருக்கும் பிடிக்குமே. பொட்டேட்டோ சிப்ஸ், பிங்கர் பிரைஸ்ன்னு சாப்பிட்டு, வாயுவை மட்டும் ஏத்திக்க கூடாது. சவ்... சவ்... போன்ற, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை விரும்பி சாப்பிட பழகணும்; இதில், என்னென்ன சத்துக்கள் இருக்கு தெரியுமா...புரதம், வைட்டமின், கால்ஷியம், பொட்டாஷியம் மற்றும் நீர் சத்து நிறைந்தது; வியாதி வந்தால், உடனே, விரட்டி அடிக்கும் நிவாரணியும் கூட.வயிறு சம்மந்தமான பிரச்னைகள், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி போக்க வல்லது; கர்ப்பிணி பெண்களுக்கு, மிகச் சிறந்த ஊட்டச்சத்து; கர்ப்பிணி பெண்கள் கை, கால்களில் நீர் கோத்து, வீக்கம் ஏற்படும், அதனால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதனால், கருவில் உள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. இதுமட்டுமல்ல, குட்டீஸ்களின் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான, கால்ஷியம் சத்து, இந்த காயில் உள்ளதால், அடிக்கடி, குட்டீஸ்கள் சாப்பிடுவது நல்லது. முக்கியமாக, புற்றுநோய்க்கு காரணமான கிருமிகளை தடுத்து நிறுத்துகிறது. சவ்... சவ் சூப் சாப்பிட்டு வந்தால், கொழுப்பு குறையும்; இடுப்பு பகுதியில் உள்ள, அதிகபட்ச சதைகள் குறையும்.நரம்பு தளர்ச்சி பிரச்னைகளை நீக்கும்; வயிற்றில் இருக்கும் நச்சுக்களை போக்க வல்லது; அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வயதான தோற்றம் மறைந்து, முகம், உடலில் காணப்படும் சுருக்கங்கள் மறைந்து இளமையாக தெரிவர்.கூட்டாக சாப்பிட பிடிக்காதவர்கள், அவியல், மோர் குழம்பு, கார சட்னி, சவ்... சவ் வறுவல் செய்து சாப்பிடலாம்.சவ்... சவ், காய்ந்த மிளகாய், பூண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, அரைத்து இட்லிக்கு, சட்னியாக சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.குட்டீஸ்களுக்கு தோல் நீக்கி, மெல்லியதாக, சீவிய, சவ்... சவ்வில், மிளகாய் துாள், மஞ்சள் துாள் சேர்த்து, உருளைக் கிழங்கை வறுப்பது போல், வறுத்து கொடுத்தால், இன்பமாக சாப்பிடுவர். சவ்... சவ் பஜ்ஜியும் செய்யலாம். எப்படியாவது, சவ்... சவ்வை சுவையாக செய்து, அனைவரும் சாப்பிடுங்க; உடல் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா!'சோ சுவிட் சவ்... சவ்...' என, குட்டீஸ் கத்துவது, என் காதில் விழுகிறது!- விமலன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !