திருடா திருடா!
ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி இருக்கும். மார்க்கெட்டில் எங்கு பார்த்தாலும் தலைகள். கடைக்காரர்களின் சத்தமும், வாடிக்கையாளர் சத்தமும் காதைத் துளைத்தன. ரவி ஒரு வழியாக அம்மா சொன்ன சாமான்களை வாங்கிக் கொண்டு மார்க் கெட்டை விட்டு நகர்ந்தான்.அந்த நேரம் ஒரு பெண்மணியின் கதறல்.''என் குழந்தையின் சங்கிலி காணவில்லை. அதோ திருடன்! திருடன்! பிடியுங்கள்...'' என்று அலறினாள்.அவளைச் சுற்றிக் கூட்டம் சேர ஆரம் பித்தது. அப்போது ஒருவன் ரவியை இடித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு விலகி ஓடிக் கொண்டிருந்தான். ரவிக்கோ எரிச்சல் தாங்க முடியவில்லை. அந்த ஆளைப் பார்த்து மெதுவாக முனகியவாறே முறைத்தான்.அப்போது அந்தக் கூட்டத்தினர் ஓடிய வனைப் பிடித்து இழுத்து வந்து விசாரித்தனர்.அதற்கு அவன், ''இந்தக் குழந்தையின் சங்கிலியை நான் எடுக்கவில்லை. என்னை நன்கு சோதனை செய்து கொள்ளுங்கள்,'' என்று திணறியபடி கூறினான்.அந்தப் பெண், ''நான் என் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு காய் வாங்கும் போது, இவன் என் பின்புறமாய் நின்று கொண்டு குழந்தையின் கழுத்தில் கிடந்த சங்கிலியை இழுத்தான்,'' என்றாள்.பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் அவனை சோதித்து விட்டு அவனிடம் ஒன்றும் இல்லை என்று அவனை விட்டுவிட்டனர்.இதைக்கேட்டுக் கொண்டிருந்த ரவி, குழப்பத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அப்போது அவனைத் தொடர்ந்து அந்த ஆள் வந்து கொண்டிருந்தான்.ரவிக்கு சற்றுப் பயம் வந்துவிட்டது. இருந்தாலும் தைரியமாக அவனைப் பார்த்து, ''நீ ஏன் என்னைத் தொடர்ந்து வருகிறாய்?'' என்றான்.அதற்கு அவன், ''என் சங்கிலி உன் கூடையில் இருக்கிறது. அதை எடுத்துக் கொடு,'' என்றான்.ரவி அதிர்ச்சியுடன் கூடையைப் பார்த்த பொழுது அந்தக் குழந்தையின் சங்கிலி கிடந்தது.''இது உன்னுடையதல்ல... அந்தக் குழந்தையுடையது. இதை அந்தப் பெண்மணியிடம் தான் ஒப்படைக்கப் போகிறேன்,'' என்றான்.''இதை நான்தான் உன் கூடையினுள் வைத்தேன். மரியாதையாக என்னிடம் தந்துவிடு. இல்லையேல் உன்னைக் கொன்று விடுவேன்,'' என்று மிரட்டினான்.ரவி வீட்டை நெருங்கியதும் வேகமாக வீட்டிற்குள் ஓடி, ''அம்மா இப்போது இங்கு ஒருவன் வருவான். அவனிடம் சற்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருங்கள். ஒரு நொடியில் வந்து விடுகிறேன்,'' என்று கூறி தன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜரத்தினத்திடம் சென்று, ''சார் நான் ஒரு திருடனை பிடித்து வைத்திருக்கிறேன். விரைவில் அவனைக் கைது செய்யுங்கள்,'' என்று கூறி அவரைக் கூட்டிக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தான்.அப்போது அந்தத் திருடன் ரவியின் தாயிடம் தன்னுடைய சங்கிலியை ரவி திருடிக்கொண்டு வந்து விட்டதாகவும், அதைத் திருப்பித் தரும்படியும் கூறிக் கொண்டு இருந்தான்.பிறகு ரவி அனைத்து விவரங்களையும் எடுத்துக் கூறினான்.பிறகு இன்ஸ்பெக்டர் அந்த திருடனை காவல் நிலையம் அழைத்துச் சென்று காவலில் வைத்தார். பிறகு அந்தச் சங்கிலி உரியவரிடம் சேர்ப்பித்தனர். காவல்துறை அதிகாரி அனை வரும் ரவியைப் பாராட்டினர்.***