உள்ளூர் செய்திகள்

சுவாமி விவேகானந்தர்! (4)

மனவலிமையால் சாதனைகள் புரிந்து, உலகில் புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களின் தொகுப்பு தொடர்... புலிக்கு உணவு! சுவாமி விவேகானந்தர், அமெரிக்கா செல்லும் முன், இந்தியாவில், பல பகுதிகளிலும், நான்கரை ஆண்டுகள் பயணம் செய்தார். அந்நாட்களில், பிச்சையில் கிடைத்த உணவையே உட்கொண்டார்.ஒரு நாள், 'ஏழைகள் எனக்கு உணவு தருகின்றனர்; இதனால், அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்... 'எனக்கு தரும் ஒரு பிடி அரிசியை சேமித்தால், அவர்கள் குழந்தைகளுக்கு இன்னொரு நாள் உணவு கிடைக்குமே; என் உடலை காப்பாற்றி, என்ன ஆகப் போகிறது' என எண்ணியபடியே, 'இனி பிச்சையெடுக்க மாட்டேன்' என தீர்மானம் செய்தார். உணவை தவிர்த்து, தவம் மேற்கொள்ள காட்டிற்கு சென்றார். பசி மயக்கத்தால், ஒரு மரத்தடியில் அமர்ந்து, இறைவனை தியானிக்க ஆரம்பித்தார்; அதுவே தவமாகியது.தவம் கலைந்த போது, இரண்டு நெருப்புத் துண்டுகள் போல் சற்று துாரத்தில் எதுவோ மினுங்குவதை கண்டு, உற்று நோக்கினார். சந்தேகமேயில்லை அவை புலியின் கண்கள்; நெருங்கி வந்து கொண்டிருந்தது புலி. விவேகானந்தர் உடல் -இம்மியும் அசையவில்லை. அவருக்கு எதிரே சற்று துாரத்தில் அந்த புலி படுத்தது. அதை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்.'சரி தான்... என்னை போல் அதுவும் பசியோடு இருக்கிறது போலும்! என் உடலால், இந்த உலகிற்கு நன்மை ஏற்படும் என்று தோன்றவில்லை... இந்த புலிக்காவது, என் உடல் உணவாக பயன்படட்டும்' என எண்ணியபடி மரத்தில் சாய்ந்து, புலி பாயும் கணத்துக்காக காத்திருந்தார்.நேரம் கடந்தது. அவருக்கு சந்தேகம் வந்தது; கண்களை திறந்தார். அங்கே புலி இல்லை; அது, அமைதியாக எதிர் திசையில் சென்று கொண்டிருந்தது. மனம் உருகினார் விவேகானந்தர். 'இறைவன் எப்படியெல்லாம் என்னை பாதுகாக்கிறார்' என, உணர்வு பெருக்கால் அன்றைய இரவை தவத்தில் கழித்தார். பொழுது விடிந்தது - களைப்பு, சிரமம் என எதுவும் அவரிடம் இல்லை. உடலும், மனமும் புதிய ஆற்றல் பெற்றிருந்தன.தவ வாழ்வுக்கான பயணத்தை தொடர்ந்தார் விவேகானந்தர். வெள்ளரிக்காயின் கதை!ஒருமுறை, சுவாமி அகண்டானந்தருடன் பயணம் மேற்கொண்டிருந்தார், சுவாமி விவேகானந்தர். இமயமலையில் உள்ள அல்மோரா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். சாப்பிட்டு, பல மணி நேரம் ஆகியிருந்தது.வழியில், இஸ்லாமியர்களின் இடுகாடு இருந்தது. அதன் அருகே சென்றபோது, பசி, தாகம் காரணமாக, விவேகானந்தருக்கு களைப்பு ஏற்பட்டது. அவரால் நடக்க முடியவில்லை. மயங்கி விழும் நிலையில் இருந்தார்.உணவோ, தண்ணீரோ கிடைக்குமா என தேடி சென்றார் அகண்டானந்தர். அப்போது, இடுகாட்டில் பணி செய்து வந்த ஜுல்பிகர் அலியை சந்தித்தார் விவேகானந்தர். அவரது குடிசையில், ஒரே வெள்ளரிக்காய் மட்டும் இருந்தது. பசியால் வாடும் விவேகானந்தரின் மோசமான உடல் நிலையை அறிந்து, அதை கொடுக்க முன் வந்தார் ஜுல்பிகர் அலி. பலவீனமாக இருந்த விவேகானந்தரால் அதை வாங்க முடியவில்லை. வாயில் வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.மிகுந்த தயக்கத்துடன், 'சுவாமி... நான் முஸ்லீம் ஆயிற்றே...' என்றார் அலி. 'அதனால் என்ன... அனைவரும் சகோதரர்கள் அல்லவா...' களைப்பிலும் புன்முறுவல் பூத்தார் விவேகானந்தர்.வெள்ளரிக்காயை சாப்பிட செய்தார் அலி. களைப்பு நீங்கி நன்றி சொல்லி புறப்பட்டார் விவேகானந்தர். பின், ஐரோப்பிய நாடுகளில் ஆன்மிக கருத்துகளை பிரசாரம் செய்து, உலகப் புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் அல்மோரா பகுதிக்கு சென்றார். அவரை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் சென்றனர், பக்தர்கள். ஓரமாக நின்று அதை பார்த்துக் கொண்டிருந்தார் அலி. விவேகானந்தரை அடையாளம் தெரியவில்லை. ஆனால், அலியை, அடையாளம் கண்டு கொண்டார் விவேகானந்தர். பக்தர் கூட்டத்தையும், பரபரப்பையும் பொருட்படுத்தாமல் ஓடி வந்து ஜுல்பிகர் அலியைக் கட்டியணைத்தார். உடன் வந்தவர்களுக்கு அலியை அறிமுகம் செய்து நன்றியை சமர்ப்பித்தார்.- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !