நிதானம்!
அசோகபுரி கிராமத்தில் உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான் கார்த்திக். படிப்பில் படுசுட்டி என்றாலும், குறும்புத்தனம் மிக்கவன். எந்த செயலையும், அவசரகதியில் செய்து முடிப்பான்; எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது அவன் அகராதியில் இல்லாத ஒன்று!அன்று -வீட்டில் தனி அறையில் கணினி முன் அமர்ந்து, 'ஆன்லைன்' வகுப்பில் பாடத்தை கவனித்து கொண்டிருந்தான். மிகவும் விருப்பமான அறிவியல் பாடத்தை ஆர்வமாய் கவனித்து குறிப்பெடுத்தான். அந்நேரம் மின்சாரம் தடைப்பட்டது; யூ.பி.எஸ்., பழுதுப்பட்டிருந்த நிலையில் கணினி செயல்படாமல் நின்றது. இதைக் கண்டு எரிச்சல் அடைந்தான் கார்த்திக்.பாடம் தடைப்பட்டதில் ஏமாற்றம் அடைந்தான்; ஆத்திரத்தில் மின் இணைப்பு உள்ள, 'சுவிட்ச்' போர்டை வேகமாய் குத்தி விட்டான்.'படால்' என்ற சத்தத்துடன் உடைந்து, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த ஒயர் வெளியே தொங்கியது. அச்சமயம், மின்சாரம் திரும்பி வர அதில் கை வைத்து கொண்டிருந்தவன் மின்சாரம் தாக்கி, துாக்கி வீசப்பட்டான்.'ஐயோ...' அலறலோடு தரையில் மயங்கி விழுந்தான்.சத்தம் கேட்டு சமையல் அறையிலிருந்து ஓடி வந்தாள் அம்மா மீனா. அவனை துாக்கி தன் மடியில் கிடத்தி ஆசுவாசப்படுத்தினாள்.சிறிது நேரத்திற்கு பின் -இயல்பு நிலைக்கு திரும்பினான். என்ன நடந்திருக்கிறது என உணர்ந்தான். உடல் முழுதும் பயத்தில் நடுங்கியது. 'எசகு பிசகாக ஏதாவது நடந்திருந்தால் விபரீதமாகியிருக்கும். உயிர் பிழைக்க வாய்ப்பே இருந்திருக்காதே' என நினைத்த போதே நெஞ்சு, 'திக்' என்றது.மெல்ல எழுந்து அமர்ந்து, அம்மாவின் முகம் பார்த்தான் கார்த்திக்.சோகத்தில் மூழ்கியிருந்தவளுக்கு கண்ணீர் ததும்பி கொட்டியது.''அம்மா... என்னை மன்னிச்சிடுங்க.... மின்சாரம் நின்றதால், பாடம் தடைப்பட்ட அவசரத்தில் நிதானமின்றி ஆத்திரத்தில் அறிவு இழந்து நடந்துவிட்டேன்; அது இப்படி ஒரு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை...'' என கூறி அழுதான் கார்த்திக்.''எதிலும் நிதானம், பொறுமை, முன் யோசனை அவசியம் என்று எத்தனை முறை உனக்கு சொல்லியிருக்கிறேன். ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால்...'' என விம்மினாள் அம்மா. கண்ணீரை துடைத்தான் கார்த்திக்.ஆதரவோடு மகனை கட்டியணைத்து, தலையை கோதிவிட்டபடி, ''ஆத்திரம் அறிவை மழுங்கடிக்கும்; சற்று சிந்தித்து செயல்பட்டிருக்கலாம்; ஆத்திரத்தில் ஆபத்தை தானே தேடிக் கொண்டாய். நற்பண்புகளோடு வளரும் அறிவு தான், உயர்வான நிலைக்கு அழைத்து செல்லும். மறந்துவிடாதே...''அம்மாவின் வார்த்தைகள் மந்திரச் சொற்களாய் மனதில் பதிந்தன.''இனி எப்போதும் ஆத்திரப்பட்டு அறிவிழக்க மாட்டேன்...''உறுதியுடன் அம்மாவின் கரங்களை பிடித்தான் கார்த்திக்.குழந்தைகளே... ஆத்திரம் அறிவை இழக்க செய்யும் என்பதை புரிந்து கொண்டீர்களா... எப்போதும் நிதானமாய் செயல்படுங்கள்!- மு.நடராசன்