உள்ளூர் செய்திகள்

வாசிப்பு தந்த வரம்!

நவம்பர் 14 குழந்தைகள் தினம் இந்தியாவில் குழந்தைகள் தினம், ஒவ்வொரு ஆண்டும் நவ., 14ல் நம் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் கொண்டிருந்தார் நேரு. ரோஜாவின் ராஜா என அன்புடன் அழைக்கப்பட்டவர். பள்ளியில் படித்த காலத்திலேயே கடும் உழைப்புடன் திகழ்ந்தார். பிற்காலத்தில் அரிய சாதனைகள் புரிய அவரது அயராத உழைப்பே அடிப்படையாக அமைந்தது. நற்சிந்தனையை ஏற்படுத்திய அவரது பள்ளி வாழ்க்கை, அங்கு படித்த புத்தகம் குறித்து பார்ப்போம்... ஐரோப்பிய நாடான இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ளது ஹாரோ பள்ளி. ஏற்ற தாழ்வை போக்கும் சீருடை, எழிலான சுற்றுப்புறம் உடையது. இது, ஜான் லையன் என்பவரால், கி.பி., 1572ல் உருவாக்கப்பட்டது. பள்ளிக் கல்வியை இங்கு தான் பயின்றார் நேரு. இங்கிலாந்தில் பிரதமராக பொறுப்பு வகித்த ஐந்து பேர் இங்கு படித்தவர்கள். இது தவிர ஐந்து மன்னர்கள், நோபல் பரிசு பெற்ற இலக்கியச் சிற்பிகள், உலகப் புகழ்பெற்ற நடிகர்கள் என, பலரும் இதே பள்ளியில் படித்துள்ளனர். இங்கு நேரு படித்த போது, அவருக்கு ஒரு புத்தகம் பரிசாக கிடைத்தது. ஐரோப்பிய நாடான இத்தாலியை நவீனமயமாக உருவாக்கிய ஜோசப் கரிபால்டியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான முதல் பகுதி புத்தகம் தான் அது. கருத்துான்றி வாசித்தார் நேரு. அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. அந்த புத்தகத்தின் மற்ற இரண்டு பாகங்களையும் வாங்கி ஆர்வத்துடன் படித்தார். பிற்காலத்தில் இந்திய விடுதலை இயக்கத்தில் அவரை பங்கேற்க துாண்டியது அந்த புத்தகம் தான். பள்ளியில் கிடைத்த புத்தகப்பரிசு நேருவின் வாழ்க்கையில் உயர்ந்த லட்சியத்தை வகுக்க காரணமாக அமைந்தது. பின், இந்திய பிரதமராக பொறுப்பு வகித்த போது, 1960ல் இந்த பள்ளிக்கு வருகை தந்தார் நேரு. மிகச்சிறப்பான வரவேற்பும் கவுரவமும் அளிக்கப்பட்டது. வாழ்வில் ஒழுக்கத்தையும், சிறந்த கல்வியையும், பகுத்தறியும் திறனையும் அந்த பள்ளியில் கற்றுக் கொண்டதாக அப்போது நினைவு கூர்ந்தார் நேரு. புகழ் மிக்க இந்த பள்ளி வளாகத்தில் தான், ஹாரிபாட்டர் அண்ட் தி பிலாசபர்ஸ் ஸ்டோன் என்ற திரைப்படத்தில் சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடந்தது. நேருவின் பெயரால் இந்த பள்ளியில் ஒரு அமைப்பு இன்றும் இயங்கிவருகிறது. இந்த அமைப்பின் தற்போதைய தலைவர் அசர் கான் என்ற மாணவர், 'பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் ஜவகர்லால் நேரு ஒரு முன்மாதிரி...' என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். ஜவகர்லால் நேரு பிறந்தநாளில் சிறந்த புத்தகங்களை படித்து, நல்லறிவு பெற்று நாட்டையும், நம்மையும் உயர்த்த உறுதி ஏற்போம். பொன்மொழிகள் வா ழ்வில் சிறப்பு பெற நல்லறிவுரைகள் பல வழங்கியுள்ளார் நேரு. அவற்றில் சில... * இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை அமைப்பவர்கள் * அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும் * உலக வரலாற்றை படிப்பது சிறப்பு; வரலாற்றை படைப்பதே அதனினும் சிறப்பு * நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது * வாய்மையின் நெருங்கிய நண்பன் அச்சமின்மை * திட்டமில்லாத செயல் துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது * கோபத்தை அன்பாலும், தீமையை நன்மையாலும் தான் போக்க முடியும் * அறிவுள்ள அதிகாரம் சிறப்புறும். - மோகன ரூபன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !