கடைசி பெஞ்சு!
ஐதராபாத் அருகே, செகந்திராபாத், சந்தோஷி மாதா பள்ளியில், 1981ல், 6ம் வகுப்பு படித்தபோது, இரண்டாவது வரிசையில் அமர்ந்திருப்பேன். வேதியியல் வகுப்பின் போது மட்டும் ஆர்வமின்றி, அரட்டை அடிக்க கடைசி வரிசைக்கு போய் விடுவேன். இதை கவனித்துவிட்டார், வேதியியல் ஆசிரியை லதா. அன்று, முதல் வரிசைக்கு என்னை வர சொன்னார். மாணவியர் மிகவும் ஏளனம் செய்து சிரித்தனர். அவமானமாக உணர்ந்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த வகுப்பில் கடைசி வரிசையில் மறைந்து கொண்டேன். என்னை தேடியபடி விசாரித்தவரிடம், 'மிஸ்... ஒளிந்து கொண்டிருக்கிறான்...' என்று காட்டிக் கொடுத்துவிட்டனர்.வேறு வழியின்றி, முன் பெஞ்சுக்கு வந்தேன். கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தபடி, 'ஏன்... என்னை மட்டும் தினமும் முதல் பெஞ்சில் உட்கார சொல்றீங்க...' என கேட்டேன். சிரித்தபடியே, 'உன்னை, மிகவும் பிடிக்கும்; அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதற்காக தான் முதல் வரிசைக்கு அழைக்கிறேன்...வேதியியலில் நீ நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டாமா...' என்றார்.சற்றும் எதிர்பாராத சொற்களால் அதிர்ச்சியடைந்தேன்; பதில் பேச முடியவில்லை.பின், தினமும் முதல் வரிசையில் அமர்ந்து பாடம் கேட்டேன். வேதியியல் பாடம் பிடித்ததாக மாறியது; தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன்.என் வயது, 52; தனியார் நிறுவனத்தில் நிர்வாகியாக பொறுப்பு வகிக்கிறேன். கதை, கட்டுரைகளும் எழுதி வருகிறேன். சிறப்பான வாழ்வுக்கு அடித்தளமிட்ட அந்த ஆசிரியையை மனதில் கொண்டுள்ளேன். - பிரகாஷ் அர்ஜுன், சென்னை.தொடர்புக்கு: 95512 81433