உள்ளூர் செய்திகள்

திக்... திக்... பங்களா! (10)

சென்றவாரம்: விடுமுறையில் பழைய குற்றால மாளிகைக்கு வந்தனர் இரட்டையரான வினுவும், மதுவும். அங்கு மர்மங்களை கண்டனர். அவற்றை அறிய முயன்ற போது, கத்தியுடன் பாய்ந்தாள் பங்களாவில் சமையல் செய்யும் பெண். இனி -கத்தியுடன், செண்பா பாய்ந்ததைக் கண்டு, 'கொல்ல வருகிறாளோ' என பயந்து மதுவும், வினுவும் கண்களை இறுக மூடினர்; கை, கால்கள் நடுங்கின. திகிலுற்றவர்களுக்கு இனிய ஏமாற்றம்.இருவரையும் தாண்டி ஓடினாள் செண்பா. ஆச்சரியத்தில் கண்களை விரியத் திறந்தனர்.சரியாக கழுத்து அறுபடாத கோழி ஒன்று, ஓடிக் கொண்டிருந்தது. அதை தொடர்ந்த செண்பாவின் கத்தி, அந்த கோழியின் கழுத்தை துண்டாக்கியது. கத்தியில் படிந்திருந்த ரத்த கறையை கழுவி, உரிய இடத்தில் தொங்க விட்டு மது, வினு அருகே வந்தாள். புதுவிதமாக முறைத்தபடி, 'என்ன கேட்டீங்க...' என்றாள்.'விருந்து சமையல், 200, 300 பேருக்கு ஏன்னு கேட்டோம்...''நான், லட்சம் பேருக்கு கூட சமைப்பேன்... உங்களுக்கென்ன...''எங்களுக்கு ஏதேதோ சந்தேகம் கிளம்புது...''சந்தேகம் உங்க ஆயுளுக்கு சத்ரு...''இவ்வளவு அழகா பேசற நீ, முக்கால் வாசி நேரம் ஊமையா நிக்கறியே ஏன்...''பேசிய வார்த்தைகளுக்கு நாம் அடிமை; பேசாத வார்த்தைகள் நமக்கு அடிமை. அதிகம் பேசப்பேச லட்சியங்கள் நீர்த்து போய்விடும். இனிமேல் அதிகம் பேசாதீர்...'மதுவும், வினுவும் தலையை தொங்க போட்டு, தாத்தா, பாட்டியிடம் வந்தனர்.'என்ன... சமையற்கட்டு பக்கம் போயிட்டு வர்றீங்க...''செண்பா சமையல் செய்ற அழகை, நேர்த்தியைப் பார்த்துட்டு வர்றோம்...' சமாளித்தான் வினு.'சாப்பிடலாமா குழந்தைகளா...''ம்...''செண்பா... சாப்பாடு கொண்டு வா...'உணவு மேஜயை தயார் செய்து தலையாட்டினாள். நால்வரும் உண்ண அமர்ந்தனர். சாதம், சிக்கன் குழம்பு, மட்டன் மசாலா, மூளை பொரியல், அவித்த முட்டை, ரத்தப் பொரியல், நெஞ்சு எலும்பு சூப், நாக்கு வறுவல், அப்பளம், வடை, பாயாசம், பீடா.மதுவும், வினுவும் தாத்தா, பாட்டி சாப்பிடுவதை ரசித்தனர். பொதுவாக வயோதிகர்கள் பத்திய சாப்பாடு அல்லவா சாப்பிடுவர். இங்கே தலைகீழாக நடந்தது. கோழி எலும்புகளை கடித்து மென்று உறிஞ்சி துப்பினர். நல்லி எலும்பை உறிஞ்சி, மஜ்ஜையை சுவைத்தனர். அவித்த முட்டைகளை முழுதாக வாய்க்குள் தள்ளினர். சாப்பாட்டிலிருந்து கவனம் சிறிதளவும் சிதறவில்லை. பெயருக்கு சாப்பிட்டு மதுவும், வினுவும் கை கழுவினர்.பீடா மென்றபடி, 'உங்க சாயங்கால நிகழ்ச்சி என்ன...' என்றார் தாத்தா.'குளியல்... ஐந்தருவில...'கேமராவை எடுத்துக் கொண்டான் வினு; குளிக்க தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டாள் மது. கேமராவை துாக்கியபடி, 'தாத்தா பாட்டி போஸ் கொடுங்க...' என்றான்.பதறியபடி, 'அய்ய... போட்டோ கீட்டோல்லாம் எதுக்கு...' என்றார்.'ஒண்ணே ஒண்ணு தாத்தா...'தலையசைத்தார். புகைப்படம் எடுக்கும் முன், மோதிரத்தை கழற்றி ஒளித்து வைத்தார்.மதுவும், வினுவும், கொல்லைப் புறத்துக்கு வந்தனர். முழுநீள வாழை இலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சுப்பையன். சமையற்கட்டிலிருந்து வெளிப்பட்டாள் செண்பா. இரு மூங்கில் கூடைகளை சுமந்து வந்து, குப்பைக் குழியில் கொட்டினாள். கடித்த எலும்புத்துண்டுகளுடன், 200 பேர் சாப்பிட்ட எச்சங்கள் இருந்தன.பந்தி எங்கே நடந்தது... இதை மோப்பம் பிடிக்க வேண்டும். வினுவின் கண்கள் சகதி நிலத்துக்குள் நிலைத்தன; சகதி கொளகொளப்பாகி, நீர் முட்டை விட்டுக்கொண்டிருந்தது. அதற்குள் சாப்பிட்டு கை கழுவினான் சுப்பையன்; வயிற்றை திருப்தியாக தட்டி பெரிதாய் ஏப்பமிட்டவனிடம், 'சரி வா... வண்டியைக் கட்டு...' என்றான்.'எங்க...''ஐந்தருவிக்கு...''எதுக்கு அவ்வளவு துாரம்; பழைய குற்றாலத்துலயே குளிக்கலாமே...''பரவாயில்லை... புறப்படு...''கொஞ்சம் பொறுங்க; குதிரை சாப்பிட்டுக்கிட்டு இருக்கு...'குதிரை லாயம் பக்கம் நடந்தான் வினு; என்ன ஆச்சரியம்! கறுப்புக் குதிரை புல் தின்னாமல் கோழிக்கறியை சாப்பிட்டு கொண்டிருந்தது. வியந்த வினுவிடம், 'இதிலென்ன ஆச்சரியம் இருக்கு... பழக்கப்படுத்தினா எல்லா மிருகங்களும் மனுஷ சாப்பாட்டை சாப்பிடும். சில மிருகங்களுக்கு ஒத்துக்காம முடி உதிரும்; அவ்வளவு தான்...' என்றான்.குதிரைக்கு சேணமிட்டு பூட்டினான் சுப்பையன்; வண்டி சீறிப் பாய்ந்தது. 'ராத்திரில கெட்ட கெட்ட கனவு வந்துச்சா...' என்றான் சுப்பையன்.'வருமா... வரும்ன்னு உனக்கு எப்படி தெரியும்...''நீங்க குழந்தைகள்; புதிய இடத்துல தங்குறீங்க. கெட்ட கனவு வர்றது சகஜம் தானே...' சிரித்தான் சுப்பையன்.குதிரை வண்டி நின்றது; ஐந்தருவி முன் ரவுண்டானா அமைந்திருந்தது. ஏராளமான சுற்றுலா பேருந்துகள்; ஆண்களும், பெண்களும் இறங்கினர். மூலிகை எண்ணெயில் ஒருவர் மசாஜ் செய்து கொண்டிருந்தார். வினுவும் போய் நின்றான்; மசாஜ் செய்தபோது வினுவின் மனக்கண்ணில் கடந்த இரண்டு நாள் நிகழ்வுகள் மின்னல் வேகமாய் ஓடின. சில்லு கருப்பட்டி வாங்கி தின்றாள் மது. வித்தியாசமான சுவை.மதுவிடமிருந்த கேமராவை வாங்கி, சுட்டு தள்ளினான் வினு.படிக்கட்டுகளில் நடந்தனர். மண்டபத்தில் நின்ற பலர், குளிப்பவர்களை வேடிக்கைப் பார்த்தனர். ஈர சாரல் அடித்தது.கூந்தலை வகிடு எடுத்து வாரியது போல ஐந்து அருவிகள். மதுவும், வினுவும் இறங்கி ஓடினர்.மெதுவாக நகர்ந்து, ஒரு கொத்து நீர்விழ்ச்சியின் அடியில் அமர்ந்தாள் மது. காதுகளுக்குள் நீர் புகுந்தது; 'தொப்... தொப்...' என கண்முன் நீர் கம்பளம்; அதன் வழியாக பார்வையை ஓட்டினான் வினு. உயரப் பாறையில் காவி உடையில் நின்றார் ஒரு ஆசாமி; சிறிது வழுக்கினாலும், விழுந்து விட வாய்ப்பிருந்தது. பார்வையை கூர்மையாக்கினான்.கொளஞ்சி. ரயிலில் வந்த போது, 'பழைய குற்றாலம் போக வேண்டாம்' என எச்சரித்தவர்! நிதானமாக வினுவை வெறித்து சிரித்தவர், 'அபாயம்... சென்னைக்கு ஓடிப்போயிடுங்க' என சமிக்ஞையால் எச்சரித்தார்.பதிலுக்கு, 'போய்யா வேலையை பாத்துக்கிட்டு' என, சமிக்ஞை காட்டி நிமிர்ந்தவன் திகைத்தான். மாயமாய் மறைந்திருந்தார் கொளஞ்சி!- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !