யோசி பையா யோசி!
ஹரிஷ் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளியில் அவனுடைய தமிழாசிரியர் கட்டுரைப் போட்டியொன்றை வைத்திருந் தார். 'ஒற்றுமையின் வலிமை' என்பது கட்டுரையின் தலைப்பாகும். யார் நன்றாக எழுதிக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குப் பேனா ஒன்றைப் பரிசாகத் தருவதாகக் கூறியிருந்தார்.ஹரிஷ் கட்டுரை எழுதுவதற்கு ஆர்வம் கொண்டான். மனதில் ஆர்வம் இருந்ததே ஒழிய எப்படி எழுதுவது என்பதைப் பற்றித் தெரியாமல் அவன் திண்டாடினான்.மாலைநேரம் வாசற்படியில் அமர்ந்தபடி கையில் தாளும் பேனாவுமாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய பார்வை தரையில் பதிந்தது.தரையிலே கரப்பான்பூச்சியொன்று அரைகுறையாக அடிபட்டு மல்லாந்தபடி கிடந்தது. அதைச் சிற்றெறும்பு ஒன்று வந்து இழுத்துப் பார்த்தது. கரப்பான் பூச்சியை அதனால் இழுக்க முடியவில்லை.சிறிது நேரம் அவ்வெறும்பு அப்பூச்சியின் மேல் ஏறுவதும் சுற்றிச் சுற்றி பார்ப்பதுமாய் இருந்த பிறகு 'சீச்சி இந்தப்பழம் புளிக்கும்' என்ற நரிக்கதையைப் போல அதை அங்கேயே விட்டவிட்டுச் சென்று விட்டது.சிறிது நேரம் ஆகியிருக்கும். சிற்றெறும்புகள் சில ஒன்றன்பின் ஒன்றாக வந்து அதைச் சூழ்ந்து கொண்டன. பின்னர் எல்லா எறும்புகளும் அப்பூச்சியை இழுத்துச் செல்ல முனைந்தன. மெதுமெதுவாக அப்பூச்சியை நகர்த்திக் கொண்டு சென்றன.சுமார் பத்து நிமிடத்தில் சிற்றெறும்புகள் மெதுவாக அதை நகர்த்திக் கொண்டு வெகு தொலைவிற்கு எடுத்துச் சென்று விட்டன. இதையே கவனித்துக் கொண்டிருந்த ஹரிஷிற்கு திடீரென்று ஒற்றுமையின் வலிமையைப் பற்றி நினைப்பு வரத் தொடங்கியது.இப்போது கட்டுரையைத் தொடங்கினான். தன்னை விட உருவத்தில் பலமடங்கு பெரியதான கரப்பான் பூச்சியை சிற்றெறும்பு ஒன்றால் இழுத்துச் செல்ல முடியவில்லை. அதே சமயம், அப்பூச்சியைப் பல சிற்றெறும்புகள் ஒன்று கூடி வெகு எளிதாக இழுத்துச் சென்று விட்டன.இதைப் போல நாட்டில் உள்ள மக்கள் பெரும்பாலும் நல்லதொன்றினைச் செய்ய அவரவர் தாமே முன்னின்று செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இது எதைப் போன்றது என்றால் சிற்றெறும்பின் முயற்சியைப் போன்றது.ஆனால், இப்படிப்பட்ட நல்லெண்ணம் உடையவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால் அவர்கள் நினைக்கும் நல்ல காரியம் மிகப் பெரியதாக இருந்தாலும் அது வெற்றியைத் தரும். அது சிற்றெறும்புகள் ஒன்று கூடிக் கரப்பான் பூச்சியை இழுத்ததைப் போன்றது என்ற கருத்தை மையமாக வைத்து, மிக அருமையான கட்டுரையை எழுதி முடித்தான்.மறுநாள் பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் தாங்கள் எழுதி வந்த கட்டுரைகளையெல்லாம் தமிழாசிரியரிடம் தந்தனர். ஹரிஷும் தன்னுடைய கட்டுரையை ஆசிரியரிடம் கொடுத்தான்.ஆசிரியர் ஒவ்வொரு கட்டுரையாகப் படித்துப் பார்த்தார். அவற்றில் ஹரிஷ் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. அதையே முதல் பரிசாக அறிவித்தார். மாணவர்கள் கை தட்டி ஹரிஷை போற்றினர். தமிழாசிரியர் அவன் எழுதிய கட்டுரையை மாணவர்கள் முன் படிக்கும் படி சொன்னார்.ஹரிஷ் தன்னுடைய கட்டுரையைப் படிக்கலானான். அவன் கட்டுரையைப் படித்து முடித்ததும் தமிழ் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, ''பிள்ளைகளே, ஹரிஷ் சிற்றெறும்புகளைப் பற்றி எழுதியிருந்தான். பார்ப்பவர்களுக்கு அது ஒன்று கூடி இழுத்தது போல இருக்கும். உண்மையில் சிற்றெறும்புகளுக்கு மனிதரைப் போல கலந்து பேசி முடிவெடுக்கும் அறிவு கிடையாது.''அவை ஒவ்வொன்றும் தன் பக்கமாகவே பொருளை இழுக்க முயற்சிக்கும். பெரும்பான்மையான எறும்புகள் எந்தப் பக்கம் இழுக்கிறதோ அந்தப் பக்கம்தான் அப்பொருள் நகரும். இது மெதுமெதுவாகவே நடக்கும். இல்லையெனில், எல்லா எறும்புகளும் ஒரே திசையை நோக்கி இழுக்குமானால் வெகு விரைவில் அது இழுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும். அதுதான் இல்லையே! இதை நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.''இதை எதற்காக இங்கு எடுத்துச் சொல்ல வந்தேன் என்றால் மாணவர்களாகிய நீங்கள், தாங்கள் வசிக்கும் இடங்களில் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினால், செய்பவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் என்பதே!''ஆசிரியர் இதை எடுத்துக் கூறியபின், முதல் பரிசாக விலை உயர்ந்த பேனாவையும், அடுத்துள்ள இரண்டு மூன்று பரிசுகளாக ஜியோமிதிப் பெட்டி, திருக்குறள் புத்தகம் போன்றவற்றையும் தந்தார்.பரிசு பெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது சிந்திக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி சிந்திப்பதற்கு ஊக்குவிக்கக் கூடிய விஷயங்களைத் தேடிப்பிடித்து, படித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியிருந்தது.***