உள்ளூர் செய்திகள்

காக்கா முட்டை!

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது காக்கா ஒன்று. அது தன் கூட்டில் முட்டையிட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும். மாலையில் வந்து பார்த்தால் முட்டை காணாமல் போயிருக்கும்.இப்படியே நீண்ட நாட்களாக நடந்து வந்ததால் ஒருநாள் மறைந்திருந்து கவனித்தது. அங்கிருந்த நாகப்பாம்பு ஒன்று காக்கா இரை தேடுவதற்காகப் பறந்து சென்றதும், ரகசியமாக அங்கு வந்து முட்டையைக் குடித்துவிட்டுச் சென்றது.இது காக்காவுக்கு கோபத்தை வரவழைத்தது. ஆனால், நாகப் பாம்பை எதிர்த்து நிற்பது என்பது முடியாத செயல் என்பதையும் உணர்ந்தது.தனது முட்டையைப் பாதுகாக்க என்ன செய்யலாம்? என்று யோசித்தது. அதற்கு எந்தவிதமான யோசனையும் வரவில்லை. ஆண் காக்காவிடம் இதுபற்றிச் சொல்லி யோசனை கேட்டது.'இந்தக் குளத்தின் அருகே ஒரு நண்டு இருக்கிறது. அது எனக்கு நல்ல நண்பனும் கூட. அது மிகவும் புத்திசாலி. நிறைய யோசனைகள் சொல்வதில் கெட்டிக்காரன். அவனிடம் யோசனை கேட்கலாம்,'' என்றது ஆண் காக்கா.இரண்டும் நண்டிடம் போய் இதுபற்றிக் கூறி யோசனை கேட்டன.சற்று நேரம் யோசித்த நண்டு, ''நான் ஒரு யோசனை கூறுகிறேன். அதன்படி செய்தால் நாகப்பாம்பின் தொல்லையில் இருந்து முழுமையாகத் தப்பிவிடலாம்,'' என்றது.'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டன இரண்டு காகங்களும்.'மரத்தின் பக்கத்தில் ஒரு கீரியின் வளை இருப்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டது.'ஆமாம்... ஆமாம்...'' என்று வேகமாகத் தலையை அசைத்தன.'அந்தக் கீரி வளையில் இருந்து பாம்பு தங்கியிருக்கும் புற்று வரையிலும் வரிசையாக மீன்களைத் தூவி விடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாக நடக்கும்,'' என்றது நண்டு.இதனால் தங்களின் பிரச்சனை எவ்வாறு தீரும் என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் நண்டு சொல்வதில் ஏதாவது காரணம் இருக்கக்கூடும் என்று நம்பி, அதற்கு சம்மதித்தன காகங்கள்.குளத்திற்கு சென்று இரண்டு காகங்களும் நிறைய மீன்களைக் கொத்திக் கொண்டு வந்து நண்டு கூறியதுபோல கீரி வளை முதல் பாம்பு புற்று வரையிலும் வரிசையாகப் பரப்பி வைத்தன.அப்புறம் மரத்தின் மீதேறி என்ன நடக்கிறது என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தன.சிறிது நேரத்தில் வளையில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்த கீரி, மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து அதனை சாப்பிட்டது.அப்புறம் வரிசையாக மீன்கள் கிடப்பதைப் பார்த்ததும் அதற்கு சந்தோஷம் தாளவில்லை. மளமள வென்று மீன்களை சாப்பிட்டுக் கொண்டே போனது.கடைசியில் பாம்பின் புற்று வந்தது.புற்றுக்குள்ளும் மீன்கள் இருக்கக்கூடும் என்று நினைத்த கீரி, மெல்ல அதனுள் தலையை நுழைத்துப் பார்த்தது.உள்ளே சுகமாக படுத்துக் கிடந்த நாகப் பாம்பு, கீரியைப் பார்த்ததும் கோபம் அடைந்தது. வேகமாக சீறிக் கொண்டு கீரியின் மீது பாய்ந்தது.இரண்டும் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதிக் கொண்டன. கடைசியில் பாம்பைக் கொன்றுவிட்டது கீரி.காக்கா நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அதே சமயம் நண்டுக்கும் நன்றியை தெரிவித்து, சந்தோஷமாக வாழ்ந்தன.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !