அரசனை நம்பி...!
அரண்மனை மாதிரி பெரிய வீடு; வசதியான அறைகள் நிறைந்தது. தாழ்வாரத்தில் பேசினால், சமையல் அறைக்கு கேட்காது. அந்த காலத்தில் பெரியவர் மாரிமுத்து, திட்டமிட்டு கட்டியது.சில விஷயங்களுக்கு, யாரையாவது நம்பித்தான் ஆக வேண்டும். ஆனால், மாரிமுத்து, எப்போதும், யாரையும் நம்புவதில்லை. அனைத்து வேலைகளையும் அவரே செய்வார். வயதாகி விட்டதால், உடல் பலவீனம் அடைந்தது. பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஒரு நாள் -மாரிமுத்துக்கு, மருந்து மாத்திரை தேவைப்பட்டது. மகன் அருணிடம், 'டேய்... வேலை முடிந்து வரும் போது, மறக்காம, மருந்து மாத்திரை வாங்கி வா...' என்றார்.'சரிப்பா... கண்டிப்பா வாங்கி வந்துடுறேன்...' என்றான் மகன்.அவன் சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு சந்தேகம் வந்தது. 'மகன் மறந்து விட்டால்... என்ன செய்வது' என்று எண்ணியவர், மகள் அனுவிடம், 'பள்ளி விட்டு வரும் போது, மாத்திரை வாங்கி வா...' என்றார்; அவளும், சம்மதித்தாள்.மகளையும் நம்பாமல், பேரன், பேத்தியரிடமும் மாத்திரை வாங்கிவர கூறினார். ஒருவரிடம் சொன்னது, மற்றவருக்கு தெரியாது.நான்கு பேரும், மருந்து மாத்திரை வாங்கி வந்தனர். பெரியவர், யாரையும் நம்பாததால் மாத்திரைகள் குவிந்து விட்டன. அதை பார்த்த போதே, குமட்டியது. 'இதை எல்லாம் எப்படி சாப்பிட முடியும்... வீணாகத்தான் போகிறது...' என்று அங்கலாய்த்தார் பெரியவர்.'என்னிடம் சொன்னதுடன் விட்டிருக்கலாம் தானே... ஏன், எல்லாரிடமும் சொன்னீர்கள்...' என்றான் அருண்.'அலுவலக பணிகளுக்கிடையே, நீ மறந்துட்டா என்ன செய்யறதுன்னு தான் எல்லாரிடமும் சொல்லி வெச்சேன்...' என்றார்.'மறந்துட்டா என்ன... வீட்டுக்கு வந்த பின், வாங்கி தந்திருப்பேன்...' என்றான் மகன்.'சரிடா... கோபப்படாதே... இனிமேல், இப்படி செய்ய மாட்டேன்...' என்று குழந்தை போல பேசினார். அக்கம் பக்கத்தினரை நம்ப வேண்டும் என, உறுதியேற்றார்.குட்டீஸ்... நன்கு அறிந்தவர்களுடன், நம்பிக்கையுடன் பழக கற்றுக் கொள்ளுங்கள்.