உள்ளூர் செய்திகள்

இரு தவளைகள்!

ஒரு ஊரில், ஷீபா, ரியா என்ற தவளைகள் இருந்தன. இரண்டும் நல்ல நண்பர்கள்; எங்கும், ஒன்றாகவே செல்லும். கிடைக்கும் உணவை, பங்கிட்டு சாப்பிடும்.பயந்த சுபாவம் உடையது ஷீபா; எதிலும் நம்பிக்கை வைக்காது. ஆனால், ரியாவிற்கு தைரியம் அதிகம். எதையும் சாதிக்க முடியும் என நம்பிக்கையுடன் செயல்படும்.ஒரு நாள் -இரண்டும், உணவு தேடி சென்றன. கவனமின்றி, வெவ்வேறு பகுதிக்கு பிரிந்து சென்று விட்டன. சிறிது நேரத்தில், ஆபத்து ஷீபாவை நெருங்கியது. அதை அறியாது உணவு தேடிக் கொண்டிருந்தது.துாரத்தில் அதை கவனித்த ரியா, 'வேகமா ஓடி வா... என்ன ஏதுன்னு கேட்காதே...' என அழைத்தது. இரண்டும் வேகமாக குதித்து ஓடின. சிறிது துாரத்துக்கு பின், திரும்பிப் பார்த்து, நிம்மதி பெருமூச்சு விட்டன. 'அப்பாடா! நல்ல வேளை தப்பிச்ச ஷீபா...''என்ன விஷயம் ரியா...''நீ... உட்கார்ந்து உணவு தேடுன இடத்துக்கு பின்பக்கமா, ஒரு பாம்பு பதுங்கியபடி வந்துகிட்டிருந்தது; நீ, அதே இடத்தில் இருந்திருந்தால் விழுங்கியிருக்கும்...''ரொம்ப நன்றி... என்ன காப்பாத்திட்ட...' என்றது ஷீபா.'எதுக்கு நன்றி சொல்ற... ஆபத்து வந்தா காப்பாத்த வேண்டியது நண்பனோட பொறுப்பு...' என்றது ரியா.அன்று, நீர் நிலையை தேடி புதிய இடத்திற்கு புறப்பட்டன தவளைகள். பாதையில் பெரிய பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விட்டன. வெளியேற எவ்வளவு முயன்றும் முடியாமல் தவித்தன. மூச்சு வாங்கியதால் ஷீபாவிற்கு, பயம் வர துவங்கியது.'பள்ளத்தை விட்டு, வெளிய போக முடியாது; சாப்பிட எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்து சாகப் போகிறோம்...' என புலம்பியது.'கவலைப்படாதே... நிச்சயம் வெளிய போய்விடலாம்...' நம்பிக்கையுடன் சொன்னது ரியா.'உதவி செய்ய எவருமே இல்லையே; எப்படி தப்பிக்க முடியும்...' 'முடியும்... நம்பிக்கையோடு இரு...' துளியும் கலங்காமல் ஆறுதலும், தைரியமும் கூறியபடியே இருந்தது ரியா.இரண்டு நாட்கள் கடந்தன. மனதளவிலும், உடலளவிலும் தெம்பு இன்றி வாடும் நிலை ஏற்பட்டது. அப்போதும், 'கட்டாயம் பள்ளத்திலிருந்து வெளியேறத்தான் போகிறோம்...' என்றது ரியா.சற்று நேரத்தில் மழை துவங்கியது. மழை நீரை குடித்து தாகத்தை தணித்தன தவளைகள். தொடர்ந்த மழையால், வெள்ளம் நிரம்பி வழிய ஆரம்பித்தது. பள்ளத்தில் இருந்தவை நிலப்பரப்பை அடைந்தன. தவளைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தைகளே... எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் இருந்தால், வாழ்க்கையில் சாதிக்க முடியும்.- ஆர்.வி. பதி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !